38 வருடங்களுக்கு முன் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட
கல்முனை பொது நூலகத்தின் இன்றைய அவல நிலை!

முன்னாள் அமைச்சர் மர்ஹும் .ஆர்.மன்சூர்
 மரணிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்
தெரிவித்த கருத்துக்கள்..

முஸ்லிம் பிரதேசங்களின் முக வெற்றிலை என முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களால் வர்ணிக்கபட்ட கல்முனை மாநகரத்தில் இப்பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சிக்காக 38 வருடங்களுக்கு முன் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கல்முனை பொது நூலகத்தின் இன்றைய அவல நிலையே இது!

கல்முனை பொது நூலகம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் மரணியதற்கு சில மாதங்களுக்கு முன் தெரிவித்த கருத்துக்கள்..

 கல்முனை நகரிலுள்ள பொது நூலகம் பாழடைந்த நிலையில் காணப்படுவது குறித்து அந்நூலகத்தை உருவாக்கிய முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் .ஆர்.மன்சூர் மரணிபதற்கு சில மாதங்களுக்கு முன்  மிகுந்த கவலை தெரிவித்திருந்தார்.
தற்போது அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள் ஏன் இந்த பொது நூலக அபிவிருத்தியில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்றும் அன்று கேள்வி எழுப்பி கவலை வெளியிட்டார்.
கல்முனை பொது நூலகம் உருவாக்கியது பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் முன்னாள் அமைச்சர் மர்ஹும் கலாநிதி .ஆர். மன்சூர் கூறும்போது தெரிவித்ததாவது:-
என்னைப் பொறுத்தவரையில் இப்பிரதேசத்தில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களாகிய முஸ்லிம்களும் தமிழர்களும் கல்வியில் யாழ்ப்பாணத் தமிழர்களைப் போன்று முன்னேற வேண்டும் என அவாக் கொண்டவனாக நான் இருந்தேன்.
எனக்கு அரசியல் அதிகாரம் கிடைத்ததும் தொகுதி ரீதியாக எனக்கு கிடைத்த நிதியின் மூலம் என்னால் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டம்தான் கல்முனை நகரில் பல இன மக்களும் ஒன்று கூடும் இடத்தில் பொது நூலகம் அமைக்கும் வேலைத் திட்டமாகும்.
நான் இப் பொது நூலகத்தை யாழ்ப்பாணத்தில் எரிக்கப்படுவதற்கு முன்னர் அன்றிருந்த பொது நூலகம், கொழும்பு பொது நூலகம் என்பனவற்றைப் போன்று இப்பிரதேச மக்களுக்கும் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே திட்டமிட்டு செயல்பட்டேன்.
இப் பொது நூலகத்தை தினசரிப் பத்திரிகைகளையும். கதைப் புத்தகங்களையும் வாசிக்கும் இடமாக மாத்திரமல்லாமல் பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்கள் தனது அறிவுகளை விருத்தி செய்யும் இடமாகவும் தகவல் தொழில் நுட்பத் துறையில் அறிவைப் பெருக்கும் இடமாகவும் மாற்றியமைக்க வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது.
நான் மட்டக்களப்பில் சட்டத்தரணி தவராஜா போன்றோருடன் கல்வி கற்கும் காலத்தில் 1950 ஆம் ஆண்டில் அங்குள்ள பொது நூலகத்தில் 29 ஆம் இலக்க அங்கத்தவராக இருந்து சிறப்பான முறையில் பயணடைந்த அனுபவம் எனக்கு நிறைய இருக்கின்றது. அப்படியான பயனை இப்பிரதேச மக்களும் பொது நூலகத்தில் பெற்று கல்வியில் முன்னேற வேண்டும் என்ற அவாக் கொண்டிருந்தேன்.
இப் பொது நூலகத்தை ஆரம்பிப்பதற்கு இப்பிரதேசத்தில் அன்றிருந்த மறைந்த டாக்டர் முருகேசுப்பிள்ளை, டாக்டர் ஜெகநாதன், கல்விமான் சங்கைக்குரிய சகோதரர் எஸ். . . மத்தியூ, போன்றோர் உட்பட சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த கல்விமான்கள் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை அமைத்து அவர்களின் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொண்டுதான் முன்னெடுத்தேன்.
இந்நூலகத்திற்கு தேவையான அறிவு சார்ந்த நூல்களை நூலகத் துறையில் தேர்ச்சி பெற்ற எஸ்.எம். கமால்தீனின் ஆலோசனை பெற்றே அன்று இந்தியாவிலிருந்து இப் பொது நூலகத்திற்கு புத்தகங்கள் கொண்டு வரப்பட்டன.
இப் பொது நூலகத்தை திறந்து வைப்பதற்கு பொது நூலகத்தின் முக்கியத்துவம் கருதி வெளிநாட்டு அமைச்சராக அன்று பதவி வகித்த இருந்த .ஸி.எஸ்.ஹமீதை இங்கு வரவழைத்து அவரைக் கொண்டு 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி  கோலாகலமாகத் திறக்கப்பட்டதும். வானொலி புகழ் பி எச். அப்துல் ஹமீதை இவ்வைபவத்திற்கு அறிவிப்பாளராக அழைக்கப்பட்டதும் என் நினைவுக்கு வருகின்றது.
இப் பொது நூலகத்திற்குப் பக்கத்தில் முன்னாள் சபாநாயகரும் அமைச்சராகவும் இருந்த அல்-ஹாஜ் எம் எச் முஹம்மதின் உதவியுடன் சகல வசதிகளும் கொண்ட கலாசார மண்டபம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிட்டிருந்தேன். இதற்கான அடிக்கல்லும் ஹிஜ்ரா கொண்டாடாத்தின் போது அன்று அவரால் கல்முனை நகரில் பொது நூலகத்திற்கு அருகாமையில் நடப்பட்டது. பின்னர் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் இடம்பெற்ற குழப்பங்கள் காரணமாக இதற்கு வந்த நிதி கொழும்பில் ஒரு அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்குத் திருப்பி எடுக்கப்பட்டு விட்டது இது இப்பிரதேச மக்களுக்கு துரதிஸ்டவசமாகும்.
இது மாத்திரமல்லாமல் இப் பொதுநூலகத்திற்கு அருகாமையில் ( தற்போது பஸ் நிலையம் அமைந்துள்ள இடத்தில்) சிறுவர் பூங்கா ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிட்டிருந்தேன்.
இவ்வாறு இப் பிரதேச மக்களின் அபிவிருத்தியில் பல கனவுகளுடன் இருந்த எனக்கு நாட்டில் அன்று நிலவிய இனப் பிரச்சினையின் கொடூரத் தாக்கம் என்னால் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை பூரணமாகச் செய்ய முடியாமல் போய்விட்டது. இருந்தும் என்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள்தான் கல்முனைப் பிரதேசத்தில் இப்போதும் காட்சி தருகின்றன என மக்கள் கூறும் போது ஓரளவு சந்தோசமாக இருக்கின்றது.
இன்று யுத்தம் முடிந்து சமாதான சூழ்நிலை நிலவுகின்றது. இப்படியான சூழ்நிலையில் ஏன் மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக இல்லை.
எந்த அபிவிருத்தி வேலைத் திட்டமும் நன்கு திட்டமிடப்பட்டு செய்யப்படல் வேண்டும். பாருங்கள் பொது நூலகம் அமைதியான ஒரு இடத்தில் இருக்க வேண்டும். அவ்வாறுதான் திட்டமிட்டு அந்த நூலகத்தை அவ்விடத்தில் அமைத்தேன். அன்று இந்த பொது நூலகம் இருக்கும் இடம் குளமாக ( தாளையடிக் குளம் ) இருந்தது.
காற்றோட்டத்திற்கு வசதியாகவும் அமைதியான ஒரு இடமாகவும் அந்த இடத்தைத் தெரிவு செய்து அதனை மூடி பொது நூலகத்தை அவ்விடத்தில் அமைத்தேன். இன்று என்ன நடந்திருக்கிறது. பொது நூலகத்திற்குப் பக்கத்தில் சிறுவர் பூங்கா அமைய வேண்டிய இடத்தில் திட்டமிடப்படாத முறையில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்விடத்தில் எழுப்பப்படும் சப்தத்திற்கு மத்தியில் அமைதியாக யாராலும் எதனையும் வாசிக்க முடியுமா? கிரகிக்கத்தான் முடியுமா?
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இப் பிரதேச மக்களுக்கு அவசியமானது எனக் கருதி முன்னெடுக்கப்பட்ட ஒரு வேலைத் திட்டத்தை அவருக்குப் பிறகு மக்களால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன் கொண்டு செல்ல முடியாதா? செய்யக் கூடாதா?
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி ரீதியாகவோ அல்லது மாவட்ட ரீதியாகவோ தெரிவு செய்யப்பட்டாலும் பின்னர் அவர் தேசிய ரீதியில் சிந்தித்து செயலாற்ற வேண்டியது அவசியமாகும். என்பதையும் இவ்விடத்தில் கூறிக் கொள்வதற்கு விரும்புகின்றேன்.
எது எப்படியிருந்தாலும் இன்றைய அமைதிச் சூழ்நிலையில் கல்முனைப் பொது நூலகம் நவீன முறையில் சகல வசதிகளுடனும் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். பொது நூலகச் சூழல் அமைதிப் பிரதேசமாக இருக்க வேண்டும். என்பதே எனது அவா. இது நிறைவேற்றப்படல் வேண்டும் என ஆசைப்படுகின்றேன். இவ்வாறு முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் மர்ஹும் .ஆர்.மன்சூர் கல்முனை பொது நூலகம் தொடர்பாக அன்று கவலையுடன்  தெரிவித்திருந்தார்.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top