புத்தளத்தில் 4 வயது மகளை கொன்று
உடலை கலாஓயா ஆற்றில் வீசி
காணாமல் போனதாக தெரிவித்த தாய் கைது


நான்கு வயதுடைய தனது மகளைக் கொலை செய்து உடலை கலாஓயா ஆற்றில் வீசி காணாமல் ஆக்கச் செய்த சம்பவம் தொடர்பில் அச்சிறுமியின் தாயான 21 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், சாலியவெவ, நீலபெம்ம குடியேற்ற திட்டத்தின் ஒலிமடுவ கிராமத்தில் வசித்த டப்ளிவ். ஜீ. தெனூரி திசாரா (வயது 4) என்ற சிறுமியே இவ்வாறு கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டவராவார்.

கடந்த புதன்கிழமை ஜனவரி 30 ஆம் திகதி காலை 7.30 மணியளவிலிருந்து இச்சிறுமி காணாமல் போயிருந்ததோடு, இச்சிறுமியைத் தேடும் பணிகள் கடந்த நான்கு தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கடற்படையினர், விஷேட அதிரடிப் படையினர், சிவில் பாதுகாப்பு படையினர், பொலிஸார், பொலிஸ் நாய்கள் மற்றும் பிரதேச மக்களும் இணைந்து இச்சிறுமியைத் தேடும் பணிகளை முன்னெடுத்து வந்த போதிலும் அச்சிறுமி இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை. ஐந்தாவது தினமாக அச்சிறுமியைத் தேடும் பணிகள் இன்று (03) ஞாயிற்றுக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் சாலியவெவ பொலிஸிலிருந்து கருவலகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைக்க புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் கருவலகஸ்வெவ பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது காணாமல் போன சிறுமியின் தாயிடம் கருவலகஸ்வெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜயலத் நேற்று (02) சனிக்கிழமை மாலை மேற்கொண்ட விசாரணையின் போது சிறுமி கொலை செய்யப்பட்டமை தெரியவந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த புதன்கிழமை (30) சிறுமி பாலர் பாடசாலை செல்ல ஆயத்தமான போது ஏற்பட்ட கோபத்தினால் அச்சிறுமியை காலால் தாக்கியதாகவும், பின்னர் இன்னும் சில அடிகளைப் பிரயோகித்ததாகவும் சந்தேகநபரான தாய் கூறியுள்ளார். அப்போது சிறுமி நினைவிழந்ததாகவும், அப்போது அவளது முகத்தில் நீரைத் தெளித்ததாகவும் அப்போதும் பலன் கிடைக்காததால் மகளைத் தூக்கிச் சென்று கலா ஓயா ஆற்றில் வீசியதாகவும் அவள் பொலிஸாரிடம் மேலும் கூறியுள்ளார்.

இதன் பின்னர் கைது செய்யப்பட்ட இத்தாய் மேலதிக நடவடிக்கைகளுக்காக சாலிய வெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top