காலிமுகத்திடலில் நாளை 71ஆவது
 தேசிய சுதந்திர தின நிகழ்வு
விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி
இப்ராஹிம் மொஹமட் சாலி



இது தொடர்பான வைபவம் கொழும்பு காலிமுகத்திடலில் காலை இடம்பெறவுள்ளது. விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலி மற்றும் அவரது பாரியாரும் கலந்துகொள்ள இருப்பதாக அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திச்செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய தினமும் முப்படையினரின் இறுதி ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்றன. இம்முறை சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான முப்படைவீரர்கள் கலந்து சிறப்பிக்கின்றனர். இதில் சுமார் 3872 இராணுவ வீரர்கள், சுமார் 891 கடற்படை வீரர்கள், சுமார் 907விமானப் படைவீரர்கள், சுமார் 600 பொலிஸார், 523 பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர்,சுமார் 596 சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 100 தேசிய இளைஞர் படையினர் இந்த தேசிய தின மரியாதை அணிவகுப்பில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இம்முறை தேசிய தின பிரதான நிகழ்வில் ஐயாயிரத்திற்கும் அதிகமான முப்படைவீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைவீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
விஷேட அதிதியாக மாலைதீவின் புதிய ஜனாதிபதியான இப்றாஹிம் மொஹம்மட் சாலி உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் நளின் பெரேரா, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு தேசிய தின நிகழ்வை சிறப்பிக்கவுள்ளனர். IMG 9561 150x150
கொழும்பு காலிமுகத்திடல் உட்பட அதனை அண்டிய பிரதேசம் எங்கும் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
தேசியக் கொடியை சம்பிரதாய முறையில் ஏற்றி ஜனாதிபதி தேசிய தின பிரதான நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இம்முறையும் வழமைபோன்று தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தமிழ், முஸ்லிம், சிங்கள, பாடசாலைகளின் மாணவ, மாணவிகளால் இசைக்கப்படவுள்ளது. ஜயமங்களகாதாவும் இசைக்கப்படவுள்ளது. படைவீரர்களின் மரியாதை அணிவகுப்பும், முப்படைவீரர்களின் பரசூட், கடல் மற்றும் வான் சாகசங்களும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் இடம்பெறவுள்ளன.

பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரட்ன, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி,பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரும் தேசியதின நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

முன்னாள் இராணுவ ஊடகப் பேச்சாளரும் முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவின் தற்போதைய கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய தேசிய தின முப்படைபிரதான அணிவகுப்பின் கட்டளைத் தளபதியாகவும் இராணுவ கொமாண்டோ படையணியைச் சேர்ந்தபிரிகேடியர் பிரியந்த சேனாரத்ன இரண்டாவது கட்டளை அதிகாரியாகவும் செயற்படவுள்ளனர்.

இராணுவ அணிவகுப்பின் போது இராணுவம் ஆயுதங்கள், கனரக கவச வாகனங்கள், யுத்த தளபாடங்கள், உபகரணங்கள், ஆட்லறி, பீரங்கி தாங்கிய வாகனங்கள், மோப்பநாய்கள், பொறியியல் உபகரணங்கள் உட்பட யுத்தகாலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயத தளபாடங்கள், உபகரணங்களும் இடம்பெறவுள்ளன.யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற முப்படை வீரர்களும் வாகனங்கள் மற்றும் சக்கர நாற்காலிகளில் அமர்ந்தவாறு அணிவகுத்துச்செல்லவுள்ளனர்.

விமானப் படையினரின் கபீர், கே8, எப்7 ரக தாக்குதல் விமானங்களும் சி130, வை12, பிரி6 ரகவிமானங்கள் மற்றும் பெல்412, பெல்212 எம்ஐ 17 ரக ஹெலிகொப்டர்களுமே சாகசங்களை காண்பித்தவாறு செல்லவுள்ளன.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top