இனப்பிரச்சினைக்கோ பொருளாதார பிரச்சினைகளுக்கோ
காத்திரமான தீர்வு திட்டமொன்று எட்டப்படவில்லை!
- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி


தேசிய இனப்பிரச்சினைக்கோ, நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கோ இதுவரையில் காத்திரமான தீர்வு திட்டமொன்று எட்டப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொண்டுள்ளார்.
இலங்கையின் 71ஆவது தேசிய தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் கொழும்பு காலிமுகத் திடலில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சுதந்திரத்திற்கு முன்னதாக காணப்பட்ட வெளிநாட்டு மேலாதிக்கம் இன்னமும் தொடர்கின்றது. அது வேறு வடிவங்களில் நீடிக்கின்றது.
நாடு சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அரசியல்வாதிகள் பேசிய போதிலும் இதுவரையில் தீர்வு எட்டப்படவில்லை.
தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குதவற்கு தற்போதைய அரசாங்கம் முனைப்பு காண்பித்து வருவதாக தகவல்களை காணக் கிடைத்தது.
நாட்டுக்கு தேசிய அரசாங்கம் தற்பொழுது தேவையில்லை. அதனை நாம் நிராகரிப்போம். 2015ஆம் ஆண்டில் உருவாக்கிய தேசிய அரசாங்கம் எதைச் செய்யக் கூடாதோ அவற்றை மட்டுமே செய்தது.
எவ்விதமான நல்ல காரியங்களையும் செய்யவில்லை என அவர் கடுமையான விமர்சனமொன்றை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி உரையின் சாராம்சம்...

* பெப்ரவரி 04 நாம் சுதந்திரமடைந்த நாள். வெளிநாட்டு அழுத்தங்கள் அன்று போல் இன்றும் வேறு வடிவத்தில் வந்துள்ளன.

* சுதந்திரத்தின் பின்னர் இதுவரை ஒரு அரசியல் ரீதியான தீர்வு மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை காண முடியாமல் இருப்பது ஒரு பின்னடைவே. இந்த நூற்றாண்டுக்கேற்ப நாம் எமது பொருளாதார யுக்திகளை வகுக்க வேண்டும்.

* 2015 நாம் அமைத்த தேசிய அரசு செய்ய வேண்டியதை செய்யவில்லை.செய்யக் கூடாததை செய்தது. மக்களின் தேவை நிறைவேற்றப்படவில்லை.பாராளுமன்றம் இன்று கேலிப்பொருளாகியுள்ளது. துரதிஷ்ட சம்பவங்கள் நடக்கும் இடமாக அது மாறியுள்ளமை கவலைக்குரியது.

* இனப்பிரச்சினைக்கு தீர்வு பற்றி பல தலைவர்கள் பேசினர் . ஆனால் பொருளாதார முன்னேற்றம் பற்றி யாரும் கவனிக்கவில்லை. இரண்டுமே வெற்றியடையவில்லை.

* மாகாண சபைத் தேர்தல் ஒன்றரை வருட காலம் நடத்தப்படாமல் இருப்பது ஜனநாயகம் இல்லை. இதை பற்றி அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏதும் பேசாதது ஏன் ?

* தேசிய அரசை அமைக்க பேசப்படுகிறது.அது தேவைதானா? நான் ஊடகங்களில் அதை கண்டேன்.அதனை நான் நிராகரிக்கிறேன்.ஒரு எம் பியை சேர்த்து தேசிய அரசு அமைப்பது சரிதானா?

* போதைப்பொருள் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றியுள்ளது..

* ஊழலை - மோசடியை - பாதாள உலக கோஷ்டியை ஒழிக்க நாம் திடசங்கற்பம் பூணுவோம்.

* தகைமை அடிப்படையில் அரச சேவை முன்னெடுக்கப்பட வேண்டும்.
அத்துடன் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து எந்தவொரு அரச சார்பற்ற நிறுவனமும் கேள்வி எழுப்பவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர், ஊழல் மோசடிகள் மற்றும் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top