உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை
அறுவை சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சைக்கு பின் வைத்தியசாலையிலிருந்து டிஸ்சார்ஜ்

   
இங்கிலாந்தில் பிறந்த குழந்தைக்கு இதயம் உடலுக்கு வெளியே இருந்ததையடுத்து, அறுவை சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சைக்கு பின் வைத்தியசாலையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்த டீன் வில்கின்ஸ்-நவோமி ஃபிண்ட்லே தம்பதியருக்கு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. லெய்செஸ்டரில் உள்ள கிளென்ஃபீல்ட் மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தைக்கு வனெலோப் ஹோப் வில்கின்ஸ் என பெயரிட்டனர். இக்குழந்தை பிறக்கும்போதே நெஞ்செலும்பு இல்லாமலும், இதயம் உடலுக்கு வெளியே இருந்து துடித்தபடியும் காணப்பட்டது.

இதையடுத்து குழந்தைக்கு 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டது. பின்னர் வீட்டிற்கு அருகில் உள்ள குயின்ஸ் மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு 14 மாத தொடர் பராமரிப்புக்கு பிறகு குழந்தையின் உடல்நிலை தேறியதையடுத்து, குழந்தை நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. குழந்தை குணமடைந்ததால் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது மிகவும் அற்புதமான தினம் என்றும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தது அளவுகடந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும்  குழந்தையின் தாய் நவோமி ஃபிண்ட்லே நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், குழந்தை சிரமம் இன்றி மூச்சுவிடுவதற்காக 24 மணி நேரம் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என மருத்துவமனை கூறியுள்ளது. அதன்படி வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு குழந்தையின் சுவாசம் கண்காணிக்கப்படுகிறது.

இதயம் வெளியில் இருந்தபடி பிறந்த குழந்தை, அறுவைச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தது இதுவே முதல் முறையாக இருக்கும் என கிளென்ஃபீல்ட் மருத்துவமனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top