கட்டாருக்கான இலங்கை தூதுவர் பதவி விலகல்


கட்டார் நாட்டுக்கான இலங்கையின் தூதுவர் .எஸ்.பி.லியனகே பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக அவரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்புமாறு உத்தரவிட்டார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், தாம் பதவி விலகல் கடிதத்தை அனுப்பியதாகவும், ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டார் என்றும், தம்மை திருப்பி அழைக்கவில்லை எனவும், .எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.

விரைவில் இலங்கைக்குத் திரும்பவுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இராஜதந்திரியாக தனது அதிகாரபூர்வ பணிகள் முடிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

அண்மையில் ஆளுநர்கள் நியமனம் இடம்பெற்ற போது, .எஸ்.பி.லியனகேக்கு, ஆளுநர் பதவி வழங்கப்படும் என்று, எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படாததால், ஏமாற்றம் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டு புதல்வர்களையும், கட்டார் விமான நிலையத்தில் வரவேற்று அவர்களின், பயணப் பொதிகளை காவிச் சென்றதற்காக, கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் .எஸ்.பி.லியனகேயை திருப்பி அழைக்குமாறு ஜனாதிபதிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

நேற்று முன்தினம் கடந்த ஆண்டுஅக்டோபர் மாதம் கட்டார் விமான நிலையத்தை சென்றடைந்த மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர்களான யோசித ராஜபக்ஸ மற்றும், றோகித ராஜபக்ஸ ஆகியோரை, கட்டாருக்கான இலங்கை தூதுவர் .எஸ்.பி.லியனகே வரவேற்று, அவர்களின் பயணப் பொதிகளைக் காவிக் கொண்டு சென்றார்.

இது தொடர்பான ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்து, அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன.

சில அமைச்சர்கள், கட்டாருக்கான தூதுவரின் இந்தப் படங்களை, ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

யோசித ராஜபக்ஸ, றோகித ராஜபக்ஸ ஆகியோரின் பயணப் பொதிகளை காவியதன் மூலம், ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் .எஸ்.பி.லியனகே அவமானத்துக்கு உள்ளாக்கி விட்டார் என்றும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

அத்துடன், அவரை திருப்பி அழைக்குமாறும் அழுத்தங்களைக் கொடுத்திருந்தனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top