பத்தனை தேசிய கல்வியியற் கல்லூரி;
பிரச்சினைக்கு உடன் நடவடிக்கை
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்ததாக
அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியியல் கல்லூரியின் நேற்று (05) இரவு சமையல் கூட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரிகளின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தன்னிடம் தெரிவித்ததாக விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று (06) மாலை பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக ஆராய்ந்து பார்க்கும் முகமாக விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் அங்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது அங்குள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் அன்று (05) இரவு ஒரு சில அதிகாரிகளும் சிற்றூளியர்களும் அங்கு முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமை தொடர்பாகவும் ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரியின் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்த பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பத்தனை  ஸ்ரீ பாத தேசிய கல்வியல் கல்லூரியின் சமையல் கூடம் நேற்று (05)  கொட்டகலை சுகாதார அதிகாரிகளால் தற்காலிகமாக சுகாதார சீர்கேடு நிலவுவதாக கூறி சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. அது சரியான ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன். அதனை தொடர்ந்து அந்த பகுதியை உடனடியாக சுத்தம் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. அது வரை தற்காலிகமாக சமையல் அறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சமையல் அறை பகுதியை திருத்தி அமைப்பது தொடர்பாக நான் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து அவர்கள் அதனை திருத்தி அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தொலைபேசி மூலமாக என்னிடம் தெரிவித்தனர்.

அதேவேளை விடுதி  வசதிகள் மிகவும் மோசமாகவுள்ளதை காணமுடிகின்றது. இதனையும் திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒரு சில அபிவிருத்தி வேலைகள் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கப்படவில்லை. எனவே எதிர்காலத்தில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கின்ற பொழுது முன்னுரிமை அடிப்படையில் அவற்றை முன்னெடுப்பதற்கு 7பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் விரிவுரையாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரியின் சுற்றுச் சூழலும் மிகவும் மோசமாக இருக்கின்றது. இதனை அபிவிருத்தி செய்வதற்கு இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இதனை முறையாக செய்வதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்லூரியின் காரியாலயத்தில் மது அருந்திய சம்மந்தப்பட்ட நபர்களை வெளியேற்றக்கோரியும், முறையாக சுத்தமான உணவு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கல்லூரி வளாகத்தினுள் ஆசிரிய மாணவர்களால் போராட்டம் ஒன்று இன்று (06) காலை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top