பெரும்போக நெல் கொள்வனவு
அக்கரைப்பற்றில் அங்குரார்ப்பணம்
ஒரு விவசாயிடமிருந்து 02 ஆயிரம் கிலோ
நெல் மாத்திரமே கொள்வனவு செய்யப்படும்

அம்பாறை மாவட்டத்தில் பெரும் போக நெல் கொள்வனவுக்கு அரசாங்கத்தினால் ஆயிரத்தி 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

2018/2019ம் ஆண்டுக்கான் பெரும்போக நெற்செய்கை நெல் கொள்வனவு அக்கரைப்பற்று பிரதேச விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் அங்குராப்பண வைபவம் இன்று (06) அக்கரைப்பற்று நெல் களஞ்சிய சாலையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தும் சபையின் அம்பாறைப் பிராந்திய முகாமையாளர் நிமால் ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையில் உள்ள மாவட்டங்களில் அம்பாறை மாவட்டத்திலேயே விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. இதற்கான நிதி முதன்முதலாக அம்பாறை மாவட்டத்திற்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒத்துழைப்பை அமைச்சர் தயா கமகே வழங்கியிருந்தார்.

அறுவடை ஆரம்பித்தவுடனேயே உடனடியாக நெல் கொள்வனவு இப் பிராந்தியத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது நெல்லை அரசாங்க உத்தரவாத விலைக்கு வழங்கி வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

நெல் கொள்வனவுக்கு முதற்கட்டமாக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு விவசாயிடமிருந்து 02 ஆயிரம் கிலோ நெல்லை மாத்திரமே கொள்வனவு செய்வதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக அவ்விடத்திலிருந்தே கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் விடுத்த வேண்டுகோளுக்கினங்க விவசாய அமைச்சு மற்றும் நிதி அமைச்சர்கள் ஆகியோர்களுடன் பேசி 03 ஆயிரம் கிலோவாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள அனைத்து நெல்லையும், கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடுகளைமுன்னெடுப்பேன்.

இங்கு ஈரமான நெல்லை உலர வைப்பதற்கு இயந்திரம் ஒன்று இப் பிராந்திய இளைஞரால் கண்டுபிடிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் உங்களது நெல்லை உலர வைத்து வழங்க முடியும். இவ்வியந்திரத்தை கண்டுபிடித்த இளைஞரை பாராட்டுகின்றேன் இவ்வாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top