கொரோனா வைரஸ் பாதிப்பால்
வறுமையில் சிக்கும் 1.1 கோடி பேர்:
உலக வங்கி அதிர்ச்சி
கொரோனா வைரஸ் பாதிப்பால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ள, 1.1 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்குவர் என, உலக வங்கி எச்சரித்துள்ளது.
சீனாவில் வூஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 202 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சியால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், கூடுதலாக 1.1 கோடி (11 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆதித்ய மேட்டூ கூறுகையில், 'கொரோனா உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நாடுகளின் வளர்ச்சியை தடுப்பதோடு, பெரும் பாதிப்பை உண்டாக்கும். சீனா இதனால் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.
உலக மக்கள் தொகையில் 5ல் 2 பங்கு மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் வணிகம் முடங்கி உள்ளதால், நாடுகள் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளும். கிழக்கு ஆசியா, பசுபிக் நாடுகளில், சீனாவை தவிர்த்து, மற்ற நாடுகளின் அடிப்படை வளர்ச்சி 1.3% குறையும். இருப்பினும், விரைவில் இயல்பு நிலை திரும்பும்' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நோய் தாக்குவதற்கு முன், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், 2020ல், 3.5 கோடி பேர் வறுமையிலிருந்து வெளியேறுவர் என கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment