கல்முனை மாநகர எல்லைக்குள்
20ஆம் திகதி வரை
தனியார் வகுப்புகளுக்கும் தடை..!
மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை..!
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் மூடப்படும் காலப்பகுதியில் கல்முனை மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் முன்பள்ளிப் பாடசாலைகளும் மூடப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக நாட்டிலுள்ள அரச பாடசாலைகளை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ள நிலையில், இக்காலப்பகுதியில் மாணவர்களின் நலன் கருதி தனியார் கல்வி நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சினால் எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் மாநகர சபையின் வர்த்தக அனுமதிப்பத்திரம் பெற்று, இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் முன்பள்ளிப் பாடசாலைகளையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மூடுமாறு அவற்றின் நடத்துனர்களை அறிவுறுத்துகின்றேன்.
இந்த அறிவுறுத்தலை மீறி, யாராவது வகுப்புகளை நடத்தினால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு களமமைத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சம்மந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.
இக்காலப்பகுதியில் தனியார் கல்வி நிலையங்களை கண்காணித்து, பரிசோதிப்பதற்காக எமது மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி, கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு மற்றும் சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளையும் பொலிஸாரையும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.
இப்பரிசோதனை நடவடிக்கைகளின்போது தனியார் வகுப்புகள் நடத்துவது கண்டறியப்பட்டால் குறித்த தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்பதுடன் குறித்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் சம்மந்தப்பட்டோர் மீது குறைந்தது 50 ஆயிரம் ரூபா அபராதத்துடன் 06 மாத கால சிறைத் தண்டனையையும் விதிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியும் என்பதை கவலையுடன் அறியத்தருகின்றேன்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.