கொரோனா தாக்குதலுக்கு உள்ளான
 இலங்கையரின் பயண விபரங்கள்



புதிய கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் அங்கொட தேசிய தொற்றுநோய் ஆய்வு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சீனாவின் வுஹான் மாகாணத்திpல் கொரோனா வைரஸ் பரவிய 71 நாட்களின் பின்னர் இலங்கையில் முதலாவது நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இத்தாலி மொழியில் பேசும் வழக்காட்டியாவார்.

மத்தேகொட பகுதியை வசிப்பிடமாக கொண்ட ஜயந்த ரணசிங்க எனும் இவர், இத்தாலி மொழி பேசும் சுற்றுலா சாரதி வழிக்காட்டி என்பதுடன் விரிவுரையாளருமாவார்.

அவர் கடந்த மூன்றாம் திகதி முதல் இலங்கையில் சுற்றுலாவில் ஈடுப்பட்ட இத்தாலிய பிரஜைகள் நால்வருக்கு வழி காட்டியாக செயற்பட்டுள்ளார்.

இவர்கள் கடந்த மூன்றாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை சீகிரியா, பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன் அந்த இடங்களில் உள்ள விடுதிகள் பலவற்றிலும் தங்கியுள்ளனர்.

அதனையடுத்து அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விடை கொடுத்து திருப்பியனுப்பிய ஜயந்த ரணசிங்க மத்தேகொடையில் உள்ள வீட்டிற்கு மீள சென்றுள்ளார்.

52 வயதான ஜயந்த ரணசிங்க கடந்த 9 ஆம் திகதியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இன்று வரை கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 19 பேர் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்றும் தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வருகைத்தந்த மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் மட்டக்களப்பு மற்றும் கந்தகாடு ஆகிய கண்காணிப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கண்காணிப்பு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 622 ஆகும்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உள்ளிட்ட வைரஸ்களை குறுகிய காலத்தில் அடையாளம் கண்டுக்கொள்ளும் சீ.ஆர்.சீ எனப்படும் கருவியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சியிடம் கையளித்துள்ளார்.

பிரதமருக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட இந்த கருவியை காலத்தின் தேவை கருதி அவர் சுகாதார அமைச்சரிடம் கையளித்துள்ளார்.

இதேவேளை மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்று செல்வோரை அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top