அவர்கள் தான் கொரோனாவை பரப்பினார்கள்...
பழிபோட்ட சீனா –
பதிலடி கொடுத்த அமெரிக்கா
அமெரிக்க ராணுவத்தினர் தான் வுகான் நகரில் கொரோனா வைரசை பரப்பியதாக கூறிய சீன தூதரின் கருத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது.
உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் ஷீஹொ லிஜியன் கடந்த 12-ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், '' இந்த கொரோனா தொற்றுநோயை வுகான் நகருக்கு கொண்டுவந்தது அமெரிக்க ராணுவத்தின் வேலையாகத்தான் இருக்கும். உங்களிடம் உள்ள தகவல்களை ஒளிவு மறைவு இன்றி பொதுவெளியில் வெளியிடுங்கள்’’ என தெரிவித்தார்.
இந்நிலையில் சீன அதிகாரி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி கூறுகையில்,'' உலகளாவிய தொற்றுநோயை உருவாக்கிவிட்டு அதைபற்றி உலக மக்களிடம் தெரிவிக்காமல் விமர்சனங்களை திசைதிருப்ப சீனா முயற்சி செய்கிறது. சதி கோட்பாடுகளை போலியாக பரப்புவது முட்டாள்தனமானது மட்டுமல்லாமல் ஆபத்தானது. சீன மக்கள் மற்றும் உலகத்தின் நன்மைக்காக சீன அரசின் இந்த கருத்தை ஒருபோதும் சகித்துக்கொண்டு இருக்கமாட்டோம்’’ என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள சீன தூதருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment