கல்முனை தலைமைகள்அன்றும்------!

இன்றும்-----------!!

அன்றையது...



1956ம் ஆண்டு, கேட்முதலியார் எம். எஸ் காரியப்பர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலமது. கல்முனை கடற்கரைப்பள்ளி மையவாடிக்கு எல்லை அமைத்து மதில் வேலிகள் கட்டுமானம் நடந்துகொண்டிருந்த போது அன்றிருந்த தமிழ் தலைமைகளான ஜீ.ஜீ. பொண்ணம்பலம், தர்மலிங்கம் போன்றோர்கள் இதனை சட்டவிரோத செயலென குற்றம் சுமத்தி கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்ததுடன், வேலி கட்டுமான வேலைக்கும் முட்டுக்கட்டை இட்டனர்.

இந்த செய்தி கேட்முதலியார் எம். எஸ் காரியப்பர் அவர்களின் காதிற்கு எட்டியது. அப்போது அவர் அன்றைய பாராளுமன்ற அமர்விற்காக கொழும்பில் இருந்தார். சம்பவத்தை கேள்வியுற்றதும், பாராளுமன்ற அமர்விலிரிந்து வெளியாகி, உடனே ரத்மலானை விமான நிலையத்திற்கு விரைந்து, அங்கிருந்து விமானம் மூலம் அம்பாறையை அடைந்து, இரண்டு மணி நேரத்திற்குள் கல்முனை பொலீஸ் நிலையத்திற்கு வந்திறங்கினார்.

"பேண்டவன் நான் இருக்க, மலத்தை நீ ஏன் அள்ளி வந்தாய்..?" என இதனை தடுக்க வந்தவர்களிடம் நெஞ்சுரத்தோடு கேட்டு, 1931ல் மையவாடியின் எல்லைகளை வர்த்தமானி பிரகடணப்படுத்திய ஆவணத்தை அவர்கள் முன் வீசிவிட்டு மையவாடி வேலைகள் உடனே ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்பட்டன. (ஹாஜி நசீரின் செவ்வியிலிருந்து...)

தான் நின்ற மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றதும் கொழும்பில் இருந்தவர் இரண்டே மணித்தியாலங்களில் கல்முனைக்கு விரைந்து பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவந்தார் கேட்முதலியார் எம். எஸ். காரியப்பர். அன்னாரிற்கு ஏகன் ஜன்னத்துல் பிர்தெளஸ்ஸை வழங்கி வைப்பானாக!
கல்முனைக்கு வந்த சவால்களை அன்றைய மூத்த தலைமைகள் எவ்வளவு அக்கறையுடனும், சாமார்த்தியத்துடனும், ஆளுமையுடனும் முன்னின்று செய்தார்கள் என்பதற்கு இது போதுமானது.

ஆனால் இன்றைய தலைமைகள்...


கல்முனையில் 19 வருடங்களாக இயங்கிவந்த NAITA மாவட்ட காரியாலயம் எதிர்வரும் 15 திகதியிலிருந்து அம்பாறைக்கு இடமாற்றப்படவுள்ளது என உத்தியோக பூர்வ தகவல் பதிவுத்தபாலில் கடந்த 2016-10-24ம் திகதி உரியவர்களுக்கு கிடைத்தும்,

கெளரவ பிரதியமைச்சர் HMM. ஹரீஸ் அவர்கள் தற்பொழுது ஐக்கிய ராச்சியத்தில் இருக்கின்றார். தகவல் அவர் காதிற்கு எட்டி பல நாட்களும் கடந்துவிட்டது. எம். எஸ் காரியப்பர் போன்று  உடனே எல்லாம் இங்கே வந்திறங்கி செயற்பட்டிருக்காவிட்டாலும் இது குறித்து எந்த முயற்சியும் இன்னும் அவரால் எடுக்கப்படவில்லை என்றே தெரியவருகிறது.

கெளரவ மாகாண சபை உறுப்பினர் KM. ஜவாத் அவர்களும் தற்பொழுது ஊரிலே தான் இருக்கின்றார். தகவல் இவர் காதிற்கும் எட்டி பல நாட்களாகிவிட்டன. இவரிற்கும் இது குறித்த கடமையுண்டு ஆனால் இவரும் எந்த முனைப்பும் எடுத்ததாக தெரியவில்லை.

முன்னாள் கல்முனை முதல்வர் சட்டத்தரணி M. நிசாம் காரியப்பர் அவர்களும் நாட்டிலேதான் இருக்கின்றார். தகவல் இவர் காதிற்கும் எட்டி பல நாட்களாகிவிட்டன. பதவியிலிருந்த காலங்களிலே கைகட்டி வேடிக்கை பார்த்தவர், தற்பொழுதும் இது குறித்தும் எந்த முனைப்பும் எடுத்ததாக தெரியவில்லை.

கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களால் தேர்வுசெய்யப்பட்ட இவர்களின் காதில் தகவல் பல தடவைகள் எட்டியும், முட்டியும் செவிடன் காதில் சங்கொலி போல பாராமுகமாக பாசனை செய்கின்றனர் என்பதே கவலையான விடயம்.

அரசியலைப் பொருத்தவரையில் கல்முனை பதவிகளாலும், அதிகாரங்களாலும் பெயரளவில் தன்னிறைவடைந்தது. கல்முனைக்கு அமைச்சுப் பதவி இருந்தும், மாகாண சபை உறுப்பினர் பதவி இருந்தும், மாநகர முதல்வர் இருந்தும் ஏன் இவர்கள் வாயும், கையும் இல்லாதவர்களாய் உள்ளனர்?

நல்லாட்சியில் ஆளும் கட்சிக்கு முட்டுக்கொடுத்து கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கல்முனையைச் சேர்ந்தவர், பிரதி செயலாளரும் கல்முனையைச் சேர்ந்தவர், பிரதி பொருளாளரும் கல்முனையைச் சேர்ந்தவர்.

இப்படி பதவிகளும், அதிகாரங்களும் ஆட்சியிலும், கட்சியிலும் கல்முனைக்கு கொட்டிக்கிடந்தும் கண்டது என்னவோ? இன்னும் ஓட்டாண்டி சமூகமாகவே இருக்கின்றோம்.

எந்த சமூகமும் தன் தலைமை பதவிக்கு சரியானவர்களை தேர்ந்தெடுக்காதவரை, அவர்களை தலைவிதி மாறப்போவதில்லை.

அடுத்த காரியாலயமும் இடமாற்றப்படும் போது அடுத்த பதிவில் சந்திப்போம்...

- முனையூரான் முபாரிஸ்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top