குப்பைகளை வகைப்படுத்தி சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டம்

ஜனாதிபதியின் இல்லத்திலிருந்து ஆரம்பம்

வகைப்படுத்தப்பட்ட குப்பைகளை மட்டும் சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று 1 ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் விரைவில் உக்கிப்போகும் மற்றும் உக்கிப்போகாதவை என வகைப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகள் ஜனாதிபதியினால் நகரசபைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி எமது நாட்டில் திண்மக் கழிவு பிரச்சினை விமர்சனத்திற்குள்ளான ஒரு பிரச்சினையாகவும் அரசாங்கம் முன்னுரிமையளித்து தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினையாகவும் இருப்பதாகத் தெரிவித்தார்.
தூய்மையான நகரத்தையும் தூய்மையான நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு இத்திட்டம் ஒரு சிறந்த தீர்வாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களையும் வெற்றிபெறச் செய்வதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனக்குறிப்பிட்டார்.

மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சும், பெருநகர அபிவிருத்தி, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஒழுங்கு செய்துள்ளன.


இந்நிகழ்வில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க. பைசர் முஸ்தபா, சாகல ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் மாகாணசபைகள், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி ஆகியோரும் கலந்து கொண்டனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top