மட்டக்களப்பில் பிக்குவிற்கு எதிராக சிவில் சமூக அமைப்பினால்

கொக்கட்டிச்சோலை-வெல்லாவெளி
பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து இன்று 15 ஆம் திகதி  மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தினை பூட்டியதுடன் அதற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று சிவில் சமூக அமைப்பினால் நடாத்தப்பட்டது.
பல காலமாக அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்களை குறித்த மதகுரு விடுத்து வரும் நிலையில் இதுவரை அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கொக்கட்டிச்சோலை-வெல்லாவெளி பிரதான வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்த அரசியல்வாதிகள், பொது மக்கள், அதிகாரிகள் ஆகியோர் பல்வேறு கோசங்களை எழுப்பியுள்ளனர்.
பொலிஸ் உயர் அதிகாரிகள் முன்பாக அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியதுடன் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் மதகுரு திட்டினார். இது இந்த நாட்டில் சட்ட நிலையையும் நல்லாட்சி என்று சொல்லப்படுவதையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கடந்த காலத்தில் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் அத்துமீறி சென்ற குறித்த பௌத்த பிக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியாவை தாக்க முற்பட்டதுடன் பிரதேச செயலகத்தினையும் சேதப்படுத்தியிருந்தார். அதற்கு எதிராக இன்று வரை உரிய நடவடிக்கையெடுக்கப்படாத நிலையில் குறித்த பிரதேச செயலாளரையே இடமாற்றும் நடவடிக்கையெடுக்கப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும், குறித்த மதுகுரு மூலம் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டு அதிகாரிகள் சுதந்திரமான முறையில் தமது கடமைகளை மேற்கொள்ளும் நிலை ஏற்படுத்தும் வரையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில், பௌத்த பிக்குவுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் இதன் போது முன்வைக்கப்பட்டன.
இதன் போது வீதியில் டயர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிக்க முற்பட்ட போது கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவற்றினை தடுத்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஆர்ப்பட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றது.
இதன் போது சம்பவ இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சிசிர தெத்த தந்திரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
குறித்த பௌத்த பிக்குவிற்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் மட்டக்களப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்ட உறுதி மொழியை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன் பிரதேச செயலக நடவடிக்கைகளும் வழமைக்குத் திரும்பியதாக அறிவிக்கப்படுகின்றது.









Add caption

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top