தோல்வியால் துவண்டுவிட்டேன்
ஹிலாரி கிளிண்டன் உருக்கமான
பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்வியால் துவண்டு விட்டேன் என்று ஹிலாரி கிளிண்டன் உருக்கமாக பேசியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத நிலையில் தோல்வியை சந்தித்தார். தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
தேர்தல் முடிவு தொடர்பாக ஒரே ஒரு கருத்தை மட்டும் அவர் தெரிவித்து இருந்தார். ஈ-மெயில் விவகாரத்தில் அமெரிக்க புலனாய்வுதுறை தலைவர் எடுத்த முடிவு தான் எனது தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியிருந்தார்.
ஒரு வாரமாக வெளிநிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த ஹிலாரி கிளிண்டன் இன்று வாஷிங்டன் குழந்தைகள் பாதுகாப்பு இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த விழாவுக்கு வருவது எனக்கு எளிதாக அமைந்திருக்கவில்லை. பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் தான் இந்த விழாவில் நான் கலந்து கொள்கிறேன். உங்களில் பலருக்கு தேர்தல் முடிவு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கலாம். எனக்கும் அதே நிலை தான் இருந்தது. தோல்வியால் நான் துவண்டுவிட்டேன்.
இதை ஏற்றுக்கொள்வது எளிதானதாக தெரியவில்லை. நான் இந்த தேர்தல் மூலம் அமெரிக்க மக்களின் ஆன்மாவை புரிந்து கொண்டேன். அதுமட்டுமல்ல எனக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொள்ளும் நிகழ்வாகவும் இது அமைந்தது.
இன்று டொனால்டு டிரம்புக்கு நாட்டை தலைமையேற்று வழிநடத்தி செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்கா என்பது ஒரு மதிப்புமிக்க தேசம். அந்த மதிப்பை நாம் ஒருபோதும் இழக்க கூடாது. நாட்டின் மீது நம்பிக்கை வையுங்கள். நாட்டின் மரியாதைக்காக நாம் எப்போதும் போராடுவோம். இதை ஒரு போதும் விட்டுக்கொடுக்காதீர்கள்.
குழந்தைகள் நம்முடைய நாட்டின் சொத்து. அவர்களுடைய சக்தி நமக்கு தேவை. குழந்தைகள் ஒருபோதும் வறுமையில் வாடக் கூடாது. அவர்களுடைய வாழ்க்கை தான் நாட்டினுடைய வாழ்க்கை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
0 comments:
Post a Comment