அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவை புதுப்பிக்க
இணைந்து பணியாற்றுவோம்:
டொனால்டு ட்ரம்ப், விளாடிமிர் புதின் ஒப்புதல்

அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவைப் புதுப்பிப்பதற்காக இணைந்து பணியாற்றுவது என டொனால்டு ட்ரம்பும் விளாடிமிர் புதினும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அப் போது முதலில் வாழ்த்து தெரி வித்த உலக தலைவர்களில் ரஷ்ய ஜனாதிபதி புதினும் ஒருவர் ஆவார். இவர் தனது வாழ்த்துச் செய்தியை தந்தி மூலம் அனுப்பி இருந்தார். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு சந்தித்ததும் இல்லை, பேசிக்கொண்டதும் இல்லை.

இந்நிலையில், ட்ரம்பும் புதினும் முதன்முறையாக நேற்று தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசினர். இதுகுறித்து ட்ரம்பின் உதவியாளர்கள் குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரஷ்ய ஜனாதிபதி புதின், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரஷ்யாவுடனும் அந்நாட்டு மக்களுடனும் மீண்டும் வலுவான, நிலையான உறவு வைத்துக்கொள்ள மிகவும் ஆவலுடன் இருப்பதாக புதினிடம் ட்ரம்ப் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “இரு நாடுகளுக்கிடையே மிகவும் மோசமான நிலையில் உள்ள உறவை மீண்டும் புதுப்பிக்க இணைந்து பணியாற்றுவது என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். சமத்துவம், பரஸ்பரம் மரியாதை மற்றும் உள்நாட்டு விவகாரத்தில் மற்றவர் தலையிடாமல் இருத்தல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் இந்த புதிய உறவு அமையும் என புதின் தெரிவித்துள்ளார். மேலும் உலகத்துக்கே முதல் எதிரியாக விளங்கும் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது எனவும் இருவரும் ஒப்புக் கொண்டனர். இரு தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top