ரணில்-மைத்திரி முறுகல்!
உண்மையான காரணம் இதுதான்
மஹிந்த அரசு கவிழ்ந்து மைத்திரி-ரணில் தலைமையிலான புதிய அரசு உருவானபோது நாட்டில் ஒருவகையான உட்சாகம்,வளமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கை,சந்தோசம் ஏற்பட்டன.எல்லா மக்களின் பிரச்சினைக்கும் இந்த அரசிடம் தீர்வு இருக்கும் என்று மக்கள் நம்பினர்.
யுத்தம் முடிந்தபோதும் இந்த நாட்டு மக்கள் மஹிந்த ஆட்சியின்மீது இதுபோன்ற நம்பிக்கையை வைத்தனர்.அந்த நம்பிக்கை காலப்போக்கில் நிறைவேற்றப்படாமல் போனதாலேயே அவரை மக்கள் ஆட்சியில் இருந்து விரட்டினர்.
மஹிந்தவிடம் முன்வைத்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் அந்த விடயங்களை இன்னொரு அரசிடம் எதிர்பார்த்து புதிய அரசை உருவாக்கினர்.அரசு உருவான வேகத்தில் பல நம்பிக்கையூட்டல்கள் இடம்பெற்றன.அரசியல் நாகரீகம்,வீண் விரயம் தவிர்ப்பு,பிரச்சினையை ஜனநாயகரீதியாக அணுகுதல் மஹிந்த அரசின் ஊழல்,மோசடி அம்பலம் போன்றவற்றின் ஊடாக இந்த அரசு நாளுக்கு நாள் கலைகட்டியது.
எல்லாவற்றிற்றும் மேலாக வரலாற்றில் முதல் தடவையாக இரு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசை அமைத்துக்கொண்டமை மிகப் பெரிய ஜனநாயகமாக முன்னெடுப்பாக மக்களால் பார்க்கப்பட்டது.இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் வளர்வதற்கு இந்த இணைவு வழிவகுக்கும் என்று நம்பப்பட்டது.
இந்த நம்பிக்கைகள்,உட்சாகம் எல்லாம் இப்போது குறையத் தொடங்கியுள்ளன.எல்லா அரசும் ஒன்றுதான் என்று மக்கள் நினைக்கும் நிலை தோன்றியுள்ளது.மத்திய வங்கி நிதி மோசடி மற்றும் ஜனாதிபதி-பிரதமர் முறுகல் போன்றவை மக்களை மேலும் சோர்வடையச் செய்துள்ளன.
அதில் ஜனாதிபதி-பிரதமர் முறுகல்தான் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகின்றது.இதற்கான காரணத்தை மக்கள் தேடுகின்றனர்.தேசிய அரசு கலைந்துவிடுமோ என்று எண்ணுகின்றனர்.மறுபுறம்,இந்த முறுகளை மெறுகேற்றி எப்படியாவது தேசிய அரசைக் கலைத்துவிடும் முயற்சியில் மஹிந்த அணி ஈடுபட்டு வருகின்றது.
அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டா உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் மூவர் நீதிமன்றில் நிறுத்தப்பட்டமையையும் லஞ்ச,ஊழல் மற்றும் நிதிக் குற்றப் பிரிவு ஆகியவற்றின் செயற்பாடுகளையும் ஜனாதிபதி பகிரங்கமாக விமர்சித்தமையே பிரதமர்-ஜனாதிபதி முறுகல் வெளிவரக் காரணம்.
ஜனாதிபதியின் இந்தக் கூற்றின்மூலம் அவர் மறைமுகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்காவையே விமர்ச்சித்தார் என்பதை நாம் அறிவோம்.இதனால் இரண்டு கட்சிகளும் தேசிய அரசில் இருக்கின்றபோதிலும் அவை வெவ்வேறு திசைகளில் பயணிக்கின்றன என்பதை இது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதற்கான காரணம் என்ன? ஏன் பிரதமரை ஜனாதிபதி மறைமுகமாக விமரிசிக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன.சுதந்திரக் கட்சியின் பிளவின் பின்னணியில் பிரதமர் உள்ளார் என்று கூறப்படுகின்ற விடயமே இதற்கான உண்மையான காரணம்.
சுதந்திரக் கட்சியின் பிளவுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் விமல் வீரவன்சவை பிரதமர் கைக்குள் போட்டுக் கொண்டு-சுதந்திரக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி-ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் நிலைமையை ஏற்படுத்துவதற்கு ரணில்விக்ரமசிங்க முற்படுகிறார் என்று கூறப்படுகின்றது.இது உண்மையா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.ஜனாதிபதி பதவியைத் தொடர்ந்து சுதந்திரக் கட்சியின்தலைவர் பதவியையும் மைத்திரிபால சிறிசேன கைப்பற்றினார்.
சுதந்திரக் கட்சிக்குள்ளும் அதன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள்ளும் இருந்த மஹிந்த விசுவாசிகள் இதை விரும்பவில்லை.இதனால், மஹிந்தவை மீண்டும் அழைத்து வந்து சுதந்திரக் கட்சியில் இணைத்து ஆட்சியைக் கைப்பற்றுவது இல்லாவிட்டால் தனி அணியாக நின்று ஆட்சியைப் பிடிப்பது என்று முடிவெடுத்தனர்.
அந்தத் திட்டப்படி,மஹிந்த தரப்பினர் மஹிந்தவை அரசியலுக்கு அழைத்து வந்து தனியாக நின்று மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கு கடும் நெருக்குதலைக் கொடுக்கத் தொடங்கினர்.கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுதல் அல்லது கட்சியைப் பலவீனப்படுத்துதல் என்ற திட்டத்தோடு அவர்கள் களமிறங்கினர்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கும் மஹிந்த அணி திட்டங்களை வகுத்துச் செயற்படுகின்றது.
இன்று அந்தத் தரப்பினர் தொடர்ச்சியாக மைத்திரிக்கு எதிரான-அவரது கட்சிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்தப் போராட்டங்களின்மூலம் சுதந்திரக் கட்சி பலவீனமடைந்தால் அது மஹிந்த தரப்புக்கு கிடைக்கும் வெற்றியல்ல ஐக்கிய தேசிய கட்சிக்கே அந்த வெற்றி உரித்தாகும்.இந்தச் சந்தர்ப்பத்தை ரணில் விடுவாரா என்று நாம் யோசிக்க வேண்டும்.
ஆகவேதான்,தானாக வந்து விழும் இந்த வெற்றியை தக்க வைப்பதற்காக ரணில் விக்ரமசிங்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகின்றார் என்று சொல்லப்படுகின்றது.அரசியலில் வெற்றி பெறுவதற்காக பிரித்தாளும் தந்திரம் பயன்படுத்தப்படுவது புதிதல்ல.இந்தப் பிரித்தாளும் தந்திரத்தின் ஊடாகவே மஹிந்த அவரது ஆட்சியைத் தக்கவைத்திருந்தார்.
மஹிந்தவின் இந்த யுக்தியால் ஐக்கிய தேசிய கட்சியே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. பின்பு ஒருவாறு ஆட்சியைக் கைப்பற்றிய போதிலும்,தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிட்டவில்லை.அக்கட்சி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கூட்டரசை நடத்திச் செல்கின்றபோதிலும்,தொடர்ந்தும் அவ்வாறு இருக்க முடியாது.இனி வரும் தேர்தல்களில் எல்லாம் தனித்து ஆட்சியை அமைக்கும் நிலையை ஐக்கிய தேசிய கட்சி அடைய வேண்டும்.அதற்கு இப்போது கிடைத்திருக்கும் இந்த வாய்ப்புதான் ஒரே வழி.இதை ரணில் தவறவிடுவாரா?
ஐக்கிய தேசிய கட்சி பலமடைவதற்கு-தனித்து ஆட்சி அமைப்பதற்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்றே சொல்ல வேண்டும்.இன்று மஹிந்தவுடன் சுதந்திரக் கட்சியின் அதிகமான எம்பிக்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளனர்.அவர்களால் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனாலும் கணிசமான பிளவை சுதந்திரக் கட்சிக்கு ஏற்படுத்த முடியும்.அது ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்குப் பெரிதும் உதவும்.
இனிவரும் அனைத்துத் தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்பதிலும் இனி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடாது என்பதிலும் ரணில் விக்ரமசிங்க குறியாக இருக்கின்றார்.
சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவின் ஊடாக ஐக்கிய தேசிய கட்சியை வளர்த்துவிட வேண்டும் என்று பிரதமர் விரும்புகின்றார்.அதற்காக அவர் மஹிந்த அணிக்கு உதவுகிறார்-சுதந்திரக் கட்சியை மேலும் பிளவுபடுத்த அவர் திரைமறைவில் இருந்து செயற்படுகின்றார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என்பதை இதன் மூலம் எம்மால் உணர முடிகிறது.
அரசியலில் முடிச்சுப் போடுவதில் ரணில் வல்லவர் என்பது நாடறிந்த உண்மை.அவரின் காய் நகர்த்தல்களை- இராஜதந்திரத்தை இலகுவில் விளங்கிக்கொள்ளமுடியாது.சர்வதேச வலையமைப்புகளின் ஊடாக மிகவும் நிதானமாக தூர நோக்குடன் காய் நகர்த்தும் வல்லமையுள்ள ரணில் சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தாமல் இருப்பாரா என்ற கேள்வி எழுவது நியாயம்தான்.
புலிகள் தோல்வி அடைவதற்கு ரணில் நடைமுறைப்படுத்திய பிரித்தாளும் தந்திரம்தான் காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.அவ்வளவு பெரிய பலமான அமைப்பையே பலவீனப்படுத்திய ரணிலுக்கு இந்த சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துவது ஒன்றும் பெரிய விடயமல்ல.
இந்த விடயத்தை விளங்கிக்கொண்ட மைத்திரிக்கு பிரதமர்மீது அதிருப்தி ஏற்படத் தொடங்கியது.அந்த அதிருப்தியின் வெளிப்பாடுதான் ஜனாதிபதியின் அந்த சர்ச்சைக்குறிய கூற்று என்பதுதான் உண்மை.
[ எம்.ஐ.முபாறக்]
0 comments:
Post a Comment