முஸ்லிம் கட்சி தலைவர்கள்
ஐ.நா பிரதிநிதிகளிடம் கையளிப்பது என்ன?
கல்முனை இலங்கை முஸ்லிம்களின் தாயக பூமி
தே. ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எல்.றியாஸ்
இலங்கைக்கு வரும் சர்வதேச அரச தலைவர்கள் வடக்கிற்கு விஜயம் செய்து அங்குள்ள தலைவர்களை கண்டு பேசும் வழக்கம் தொடர் தேர்ச்சியாக நமது நாட்டில் இருந்து வருகின்றது. அந்த வரிசையில் இன்று நமது முஸ்லிம் கட்சி தலைவர்களையும் சந்திக்கின்றது. அப்போதெல்லாம் இந்த தலைவர்கள் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விலாவாரியாக எடுத்துக் கூறியதாக கதை விடுகின்றனர்.
முஸ்லிம் சமூகம் தேசிய இனப்பிரச்சினைக்கு இழந்தது என்ன? அந்த சமூகம் எதிர்பார்க்கும் தீர்வு என்னவென்று இன்று வரை பாராளுமன்றத்தில் உரையாற்றாத பெயர் தாங்கி முஸ்லிம் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று வெளிநாட்டு அரச தலைவர்களிடம் கொடுப்பதாக கூறும் ஆவணத்தில் தனக்கு கடுமையான சந்தேகம் இருப்பதாக தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எல்.றியாஸ் கொழும்பு இக்பால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் கடந்த 29.10.2016 இல் இடம் பெற்ற முஸ்லிம் புத்திஜீவிகளுடனான சந்திப்பில் தெரிவித்தார்.
இரண்டு முஸ்லிம் கட்சிகள் தமக்கிடையே போட்டி போட்டுக் கொண்டு வெளிநாட்டு பிரஜைகளை சந்திப்பதும் மகஜர்களை கையளிப்பதும் அதை கல்முனையை சேர்ந்த சில இளைஞர்கள் மாத்திரம் ஆகா..ஓகோ என்று முகநூல்களில் புகழ்ந்து தள்ளுவதும் கேவலமாக இருக்கின்றது.
முஸ்லிம் சமூகம் தொடர்பான எந்தவொரு அக்கரையும் இல்லாத இந்த கட்சிகள் முஸ்லிம் சமூகம் தொடர்பில் முன்வைக்கும் ஆவணங்கள் நிச்சயம் சமூகத்தின் உண்மையான நிலைப்பாட்டினை பிரதிபலிப்பதாக இருக்காது.
முஸ்லிம் சமூகத்தின் இழப்புக்கள் தொடர்பில் இந்த கட்சிகள் முன்வைக்கும் புள்ளிவிபரங்கள் ஒரே மாதிரியானவையா? அல்லது வேறுபட்டவையா?
முஸ்லிம் சமூகத்தின் இழப்புக்களுக்கு இந்த இரண்டு கட்சிகளும் கேட்கும் தீர்வுகள் என்ன? அவை ஒரே மாதிரியானவையா? அல்லது வேறுபட்டவையா?
இந்த மகஜரில் உள்ளடங்கியிருக்கின்ற விடயங்கள் உண்மையாக முஸ்லிம் சமூகத்தின் தேவையை அக்கரையை உணர்த்தி நிற்கின்றதா? இவை முஸ்லிம் சமுகத்தின் புத்திஜீவிகளினதும் முக்கிய பிரமுகர்களினதும் ஒப்புதல் பெறப்பட்ட ஆவணங்களா? இவற்றில் கூறப்பட்டிருப்பவை முஸ்லிம் சமூகத்தின் உண்மையான தேவைகளை குறித்து நிற்கின்றதா? என்பதை முஸ்லிம் சமுக புத்திஜீவிகள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
முடிந்தால் இந்த இரண்டு முஸ்லிம் பெயர் தாங்கி அரசியல் கட்சிகளும் இந்த இழப்பீடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இந்த ஆவணங்களை சமர்ப்பித்து உரையாற்ற முடியுமா? அல்லது கடந்த காலத்தில் உரையாற்றியிருக்கின்றார்களா? இவர்களால் ஒரு நாளும் இதை செய்ய முடியாது என்பதை நான் இந்த இடத்தில் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழர்கள் தமக்கு தனிநாடு வேண்டும் என்பதை வலியுறுத்திக்கொண்டு பாராளுமன்றத்தில் இருக்கும் பொழுது உண்மையாகவே கொடிய யுத்தத்திற்கும் அதை தொடர்ந்து இன்று வரையும் இழப்புக்களை சந்திக்கும் ஒரு சமூகம் என்ற வகையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி பேச இந்த இரண்டு கட்சிகளும் தயங்குவது ஏன்?
தலைவர் அஸ்ரப் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் தாயகமாக பேற்றப்பட்ட கல்முனை இன்று கற்பழிக்கப்பட்ட நகராக மாறிவருகின்றது. கடந்த 16 ஆண்டுகளாக எதுவித அபிவிருத்தியும் முன்னேற்றமும் இல்லாத நகராக இந்த நகர் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரால் திட்டமிட்டு முடக்கப்பட்டு வருகின்றதன் மர்மம் வெளிக்கொணரப்பட வேண்டும்.
நூற்றாண்டு காலமாக முஸ்லிம்களால் ஆளப்பட்டு வந்த முஸ்லிம் தாயகம் இன்று தமிழர்களின் பூமி என்று பேசப்படும் போது ஊமையர்களாகவும் செவிடர்களாகவும் இருந்து விட்டு வெளியே வந்து வீரம் பேசும் கோழைகளாக முஸ்லிம் கட்சி பிரதிநிதிகள் இருப்பது எமது சமூகத்திற்கு கிடைத்த சாபமாகும். இது பற்றி எந்தவொரு கட்சியும் பேசவில்லை என்பது சுட்டிக்காட்ப்பட வேண்டியதாக இருக்கின்றது. இதன் பின்னால் இராஜதந்திரம் இருக்கின்து என்று அரசியல்வாதிகள் கூறினால் அதை நம்புகின்ற ஒரு சமூகமும் எங்கள் பிரதேசத்தில் இருப்பது இதை விட கொடுமையாகும்.
இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைக்கும் காரணம் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் புத்திஜீவிகளுமேயாகும். இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்கின்றோம் என்று கூறி இரண்டு கூட்டங்களை நடத்திவிட்டு தமது சமூக கடமையினை செய்து விட்டதாக புத்திஜீவிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகளோ புலிவேசம் போட்ட கழுதைகளைப் போல் பாராளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலைகளில் உணவுண்டு மகிழ்கின்றனர். இந்த கேவலம் முஸ்லிம் சமூகத்தை விட்டு விரட்டப்பட வேண்டும். என்று அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment