கல்முனை ஸாஹிறாக்கல்லூரிக்கு 05 வருடகாலமாக

நிரந்தர அதிபர் இல்லை!

பாடசாலைக்குள் உள்ள பழைய மாணவரான ஒருவரை

அதிபராக நியமியுங்கள்!

(அஸ்லம்)

கல்முனை ஸாஹிறாக்கல்லூரிக்கு இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர் ஒருவரை அதிபராக நியமிப்பது தொடர்பாக இக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் தகுதியானவரை தேடிக் கொண்டிருப்பதாக அண்மையில் இணையத்தள செய்திச் சேவைகள் ஊடாக அக்கல்லூரியின் கொழும்புக்கிளை தகவலொன்றை வழங்கியிருந்தது.

இது தொடர்பாக மேற்படி கல்லூரியின் பழைய மாணவர் சங்க முன்னாள் செயலாளர் என்ற வகையிலும், அக்கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்க முன்னாள் செயலாளர் என்ற வகையிலும் சில விடயங்களை கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினருக்கு தெளிவுபடுத்த விரும்புவதாக பிரதி வலயக்கல்விப் பணிப்பாளரும், இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கச் செயலாளருமான .எல்.எம்.முக்தார் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கொழும்புக்கிளையால் வழங்கப்பட்ட செய்தியில் திரு. பீ.எம்.எம்.பதுர்தீன் அப்பாடசாலையின் நிரந்தர அதிபராக கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்டதாகவும் தற்போது அவரை கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவல் முற்றிலும் தவறானது.

திரு. பீ.எம்.எம்.பதுர்தீன் 2014ம் ஆண்டு கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளரால் அவரது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் அப்பாடசாலையின் தற்காலிக அதிபராக அவரது வழமையான கடமைக்கு மேலதிகமாக பாடசாலையில் நிலவிய குழப்ப சூழ்நிலையை அடுத்து நியமிக்கப்பட்டிருந்தார். இந்நியமனம் 03 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகக்கூடியதாக இருந்தபோதிலும் குறித்த உத்தியோகத்தர் 02 வருடத்திற்கு மேலாக இருந்து வந்தார். இவர் கிழக்கு மாகாண சபைக்கு விடுவிக்கப்பட்ட ஒரு உத்தியோகத்தர் என்பதனால் இவருக்கான சம்பளம் கிழக்கு மாகாண சபையால் வழங்கப்பட்டு வந்தது. மாகாண சபையில் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு மத்திய அரசுக்கு உட்பட்ட நிறுவனமொன்றில் கடமையாற்றுவது சட்ட ரீதியாக செல்லுபடியற்றதொன்று.

இந்நிலையில் அரசியல் ரீதியாக இசுறுபாய கல்வி அமைச்சை அணுகி குறித்த பதுர்தீனை மேற்படி கல்லூரிக்கு 2016.05.08 முன்னாள் கல்வியமைச்சின் செயலாளராக இருந்த திரு. பந்துசேன ஓய்வுபெற்றுச் சென்ற சந்தர்ப்பத்தில் இப்பாடசாலைக்கு தற்காலிக அதிபராக நியமனத்தை வழங்கி இவரை மத்திய அரசு சேவைக்கு விடுவித்துத் தருமாறு கிழக்கு மாகாண கல்வியமைச்சையும், மாகாணக்கல்விப் பணிப்பாளரையும், மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவையும், வலயக்கல்விப் பணிப்பாளரையும் கோரியிருந்தது. பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளை குறிப்பிட்டது போல இவர் நிரந்தர அதிபராக நியமிக்கப்பட்டிருப்பின் விடுவித்தலை கல்வியமைச்சு கோரியிருக்காது.

தேசிய பாடசாலையொன்றிற்கு நிரந்தர அதிபர் நியமனத்தை விண்ணப்பம் கோரி முறையான நேர்முகப்பரீட்சை சபை மூலமே கல்வியமைச்சு தெரிவு செய்யும். இதற்கு மாற்றமாக எந்தவொரு நிரந்தர நியமனத்தையும் கல்வியமைச்சு மேற்கொள்ளாது. கல்முனை ஸாஹிறாக்கல்லூரி 2012ம் ஆண்டு முதல் நிரந்தர அதிபரின்றி இயங்கி வருவதை அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளை அறியாமல் இருப்பது வேதனையானது.

இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர் ஒருவர்தான் தேசிய பாடசாலையின் அதிபராக இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. கல்முனை கல்வி மாவட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த ஒருவர் அதிபராக இருந்து நிருவகித்து வருகிறார். அதேபோன்று நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையின் அதிபராக இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் வகுப்பு உத்தியோகத்தரும், அக்கரைப்பற்று முஸ்லிம் மகா வித்தியாசாலையின் அதிபர் மற்றும் அட்டாளைச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் அதிபர், சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் அதிபர் போன்றோர் இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த அதிபர்கள்.

இவ்வாறிருக்கையில் கல்முனை சாஹிறாக்கல்லூரிக்கு மட்டும் இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர் ஒருவரை ஏன் பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளை தேடிக் கொண்டிருக்கிறது என்ற மர்மம் புரியவில்லை. உண்மையில் பழைய மாணவர் சங்கமானது அப்பாடசாலை மீது அக்கறை இருந்தால் அப்பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரை அல்லது அப்பாடசாலையில் பெற்றாராக இருந்த அல்லது அப்பாடசாலையில் கற்பித்த அல்லது கற்பித்துக் கொண்டிருக்கின்ற ஒருவரை அதிபராக நியமிப்பதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும்.

அப்பாடசாலைக்கு தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்ட திரு. பீ.எம்.எம்.பதுர்தீன் அப்பாடசாலையின் பழைய மாணவருமல்ல, பெற்றாருமல்ல, முன்னாள் ஆசிரியருமல்ல, இப்பாடசாலையை நேசித்தவருமல்ல. மாறாக இவர் பாடசாலையில் அதிபராக இருந்த காலப்பகுதியில் மாகாணக்கல்விப்பணிப்பாளோரோடு முரண்பாடு, வலயக்கல்விப் பணிப்பாளரோடு முரண்பாடு, பிரதிக்கல்விப் பணிப்பாளர்களோடு முரண்பாடு, உதவிக்கல்விப் பணிப்பாளர்களோடு முரண்பாடு, சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களோடு முரண்பாடு என்பவற்றை வளர்த்துக் கொண்டு தன்னை மேற்பார்வை செய்ய எவரும் வரக்கூடாது என நிபந்தனைகளை விதித்தமையை கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கொழும்புக்கிளை அறிந்திருக்க நியாயமில்லை. ஏனெனில் கொழும்புக்கிளை மூலமாக அவருக்கு அவரது சம்பளத்திற்கு மேலதிகமாக ஒரு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மாகாணத்தில் 172 இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு தட்டுப்பாடு இருக்கையில் சாஹிறா தேசிய பாடசாலைக்கு திரு. பதுர்தீனை தற்காலிகமாக வழங்கியது சட்டவிரோதமானது என்ற அடிப்படையில் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழவில் முறையிட்டதற்கமைய அவர் தற்காலிக அதிபர் பதவியிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளார்.

நான் கல்முனை சாஹிறாக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளராக இருந்த 1994ம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலையின் பழைய மாணவரான ஜனாப். மயோன் முஸ்தபா அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பொதுத்தேர்தலில் போட்டியிட்ட போது அவரை ஆதரிக்க வேண்டுமென்று பழைய மாணவர்கள் சங்கத்தைக்கூட்டி தீர்மானம் எடுத்து அதனை பிரசுரமாக அடித்து கல்முனைப் பிரதேசம் எங்கும் விநியோகித்தோம். அப்போது இப்பாடசாலையின் அதிபராக ஜனாப். .எம்.ஹூசைன் அவர்கள் இருந்தார்கள். இதுவே பழைய மாணவர் சங்கம் என்ற அடிப்படையில் ஒரு பழைய மாணவனுக்கு அளிக்கும் உதவியாகும். மாறாக பாடசாலைக்குச் சம்பந்தமில்லாத, பாடசாலையில் அக்கறையில்லாதவர்களை அதிபர் கதிரையில் அமர்த்தும் போது அப்பாடசாலையை திட்டமிட்ட அடிப்படையில் முன்னேற்ற முடியுமா?

2013ம் ஆண்டு இப்பாடசாலைக்கு கடமைக்காக சென்ற நான் அப்பாடசாலையிலிருந்த வன்முறைக் கும்பல்களினால் தாக்கப்பட்டு சுமார் 04 வருடங்களாகியும் அதுபற்றி ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய கல்முனை சாஹிறாக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் இன்றுவரை முற்படவில்லை. அதுவரை இப்பாடசாலையைப் பற்றி சிந்திக்காதவர்கள் இச்சம்பவத்தின் பின்னரே பாடசாலையைத் திரும்பிப் பார்த்தார்கள் என்பதனையும் நான் சொல்லியாக வேண்டும்.

எனவே, கல்முனை சாஹிறாக்கல்லூயின் பழைய மாணவர் சங்கக் கொழும்புக்கிளையினருக்கு இவ்வேளையில் நான் பகிரங்கமாக விடுக்கும் வேண்டுகோளாவது சுமார் 05 வருடகாலமாக நிரந்தர அதிபரின்றி இயங்கும் இப்பாடசாலை அதிபர் வெற்றிடத்தை நிரப்ப விண்ணப்பங்களைக் கோருமாறு கல்வியமைச்;சைக் கோருங்கள். அதுவரை இப்பாடசாலைக்குள் உள்ள அதிபர்களில் பழைய மாணவர் ஒருவரிடம் இப்பாடசாலையை பொறுப்பளித்து தேவையான ஒத்தாசைகளை வழங்குங்கள். வெளியூர் அழகனை விட உள்ளுர் முடவன் மேலானவன் எனும் நாட்டுப்பழமொழியை சிந்தித்துப் பாருங்கள் இவ்வாறு ஜனாப். முக்தார் கேட்டுள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top