அமெரிக்க உயர் பிரதிநிதிகள்

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களைச் சந்தித்தபோது

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க காங்கிரஸின் நீதி செயற்பாட்டு மேற்பார்வைக் குழுவின் தலைவர் Bob Goodlatte உள்ளிட்ட அமெரிக்க உயர் பிரதிநிதிகள் நேற்று 24 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர்.
அதிகளவிலான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் நாட்டுக்கு வருகை தந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் கூட்டு அரசாங்கத்தின் பயணம் மற்றும் அதன் வெற்றியை பாராட்டிய காங்கிரஸ் உறுப்பினர்கள், தற்போது மேற்கொண்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள்,ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார கொள்கைகளையும் பாராட்டினார்கள்.
ஐக்கிய அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையின் புதிய அபிவிருத்தி திட்டங்களுக்காக அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.
இலங்கை படையினருக்காக ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்படும் பயிற்சி வாய்ப்புக்கள் கடந்த காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும் மீண்டும் அந்த வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், விசேடமாக கடற்படையினருக்கான பயிற்சிகளை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
புவியியல் ரீதியில் இலங்கை முக்கிய அமைவிடத்திலுள்ளதனால் கப்பல் போக்குவரத்தில் மட்டுமன்றி இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பிலும் பங்களிப்பு செய்யமுடியுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்,இலங்கை பாரிய வெளிநாட்டு முதலீட்டு உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் போது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலும் கவனமெடுப்பதாக தெரிவித்தார்.
அதிகளவிலான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் நாட்டுக்கு வருகை தந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதுவொரு முக்கியமான சந்தர்ப்பமென குறிப்பிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள்,அடுத்த அமெரிக்க விஜயத்தின் போது காங்கிரஸ் பேரவைக்கும் வருகை தருமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

அமெரிக்க காங்கிரஸ் குழு பிரதிநிதிகள், இலங்கைக்கான தமது விஜயத்தின் இரண்டாவது நாளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோகனேசன், வெளிவிவிகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பல சிரேஷ்ட அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top