14 வயதில் குவைத் சென்று
14 வருடங்களின் பின் தாயகம் திரும்பிய பெண்
கடந்த 2013ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதில் குவைத் நாட்டிற்குச் சென்று பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த இலங்கைப் பெண் 14 வருடங்களுக்குப்பின் நாடு திரும்பியுள்ளார்.
முஹம்மத் அலியார் கைருகிசானம் என்ற பெண்ணே இவ்வாறு 14 வருடங்களாக குவைத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்.
ஓட்டமாவடியிலுள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மூலமாக குறித்த பெண் கடந்த 2003ஆம் ஆண்டு போலியான ஆவணங்களை சமர்ப்பித்து 14ஆவது வயதில் குவைத் சென்றுள்ளார்.
குறித்த பெண்ணை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செய்துள்ளது.
இந்த பெண் 2003ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தனது குடும்பத்திற்கு பணம் அனுப்பியுள்ளார்.
அதை தொடர்ந்து 11 ஆண்டுகளாக கைருகிசானத்திற்கு அந்த நாட்டில் சம்பளப்பணம் வழங்கப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குவைத்துக்கான இலங்கை தூதரகத்தின் செயற்பாட்டால் குறித்த பெண்ணுக்கு 500 தினார் பணத்துடன் விமான டிக்கட்டுக்களும் ஒழுங்குசெய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பெண்ணுக்கு 25 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல நேற்று வழங்கிவைத்துள்ளார்.
14 வயதில் சென்று 28 வயதில் வந்த கைருகிசானத்தைக் கண்ட குடும்பத்தார் அவரை கட்டித்தழுவி தமது அன்பினை வெளிப்படுத்தியது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்துள்ளது.
இதேவேளை குவைத் நாட்டில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்த 122 இலங்கைப்பெண்கள் நேற்று நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment