ஸ்காட்லாந்து யார்டு பொலிஸுக்கு
முதல் முறையாக பெண் தலைவர் நியமனம்
உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்டு பொலிஸின் உயரதிகாரியாக முதல் முறையாக, பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
லண்டன் மாநகர காவல்துறையின் தலைமையகம்தான் ஸ்காட்லாந்து யார்டு என்று அழைக்கப்படுகிறது. தீர்க்க முடியாத பல்வேறு வழக்குகளைக் கூட தீர்த்து வைத்ததால், ஸ்காட்லாந்து யார்டு பொலிஸின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது.
இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஸ்காட்லாந்து பொலிஸின் உயரதிகாரியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முதன்முறையாக நியமிக்கப்பட்டிருக்கும் அந்த பெண் பொலிஸ் அதிகாரியின் பெயர் கிரெஸ்ஸிடா டிக். லண்டன் மாநகரத்தின் புதிய கமிஷனரான கிரெஸ்ஸிடா தலைமையில், பொலிஸ் அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம்
43,000 பேர் பணியாற்றவுள்ளனர்.
இதுகுறித்து லண்டன் உள்துறை செயலாளர் அம்பர் ரூட் கூறுகையில் "மாநகர பொலிஸார் குறித்து கிரெஸ்ஸிடாவுக்கு தெளிவான தொலை நோக்குப் பார்வை உள்ளது. இதனால் பல்வேறு சமூகத்தினருடன் இணைந்து அவர் சிறப்பாக பணியாற்ற முடியும்" என கருத்துத் தெரிவித்துள்ளார்.
கிரெஸ்ஸிடாவுடன் இணைந்து பணிபுரிய தான் ஆர்வமாக இருப்பதாகக் கூறும் லண்டன் மேயர் சாதிக் கான் ''இது லண்டன் வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு நாள்'' எனவும் புகழ்ந்திருக்கிறார்.
188 வருட ஸ்காட்லாந்து யார்டு வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment