மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர்

இடமாற்றம் செய்யப்படாவிட்டால் மீண்டும்

புதன்கிழமை முதல் போராட்டம்

- ஆசிரியர்கள் தெரிவிப்பு

(அஸ்லம்)


மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளரை எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் மூதூர் வலயத்தை விட்டு இடமாற்றம் செய்யாவிட்டால் மீண்டும் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளருக்கெதிரான போராட்டத்தை தொடங்கவுள்ளதாக மூதூர் வலய கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரும் ஆசிரியர் நடவடிக்கைக் குழுவின் செயலாளர் ஆசிரியர் .எம்.அனஸ் தெரிவித்துள்ளார்.

மூதூர் வலயக்கல்வி அலுவலகப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களையும், அதிபர்களையும் அவமதிக்கும் விதத்திலும், அவர்களது மதத்தை கொச்சைப்படுத்தும் விதத்திலும் கருத்து வெளியிட்டு வந்த மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளரின் நடவடிக்கைகளைக் கண்டித்து கடந்த 13, 14, 21ம் திகதிகளில் நடாத்தப்பட்ட சுகவீன லீவுப் போராட்டம் உக்கிரமடைந்ததையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் தலையிட்டு மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளரை இம்மாதம் 28ம் திகதிக்குள் இடமாற்றம் செய்வதாக வாக்குறுதியளித்தார்.

இதற்கமைய இவரை இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சருக்கு அறிவித்த போதிலும் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சர் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்வதில் காத்திரமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை எனத் தெரிய வருகிறது. மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு ஆதரவாக கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி இருந்து வருவதை சுட்டிக்காட்டும் ஆசிரியர்கள் ஏற்கனவே தமக்கு வாக்குறுதியளித்தவாறு மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடவும், உண்ணாவிரதம் இருக்கவும் ஆசிரியர்கள் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யும் விடயத்தில் பாராபட்சமாக நடந்து கொள்வது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான சம்பந்தன் ஐயா, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும் ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதற்கிடையே கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர் திரு. அசங்க அபேவர்த்தன அவர்களும், மாகாணக்கல்விப் பணிப்பாளர் எம்.ரி..நிசாம் அவர்களும் இருவார கால கல்விச்சுற்றுலா ஒன்றின் நிமித்தம் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சர் திரு.தண்டாயுதபாணி மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்வதில் காட்டும் அசமந்தப்போக்கு மற்றும் பாரபட்ச நடவடிக்கைகளுக்கு மூதூர் வலய ஆசிரியர்கள் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர்.  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top