மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் தொடர்பில்

விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

மோட்டார் சைக்கிள் ஒன்றை ஓடுகின்றபோது அல்லது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லுகின்ற போது ஆள்கள் ஒவ்வொருவரும் தலைக்கவசம் அணியும்போது அவதானிக்கப்பட வேண்டிய விடயங்கள் உள்ளிட்ட மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பான 10 ஒழுங்குவிதிகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தில் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


மோட்டார் சைக்கிள் செலுத்துபவர் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நாடிப்பட்டியுடன் தலைக்கவசம் பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும் முதலான 10 விதிகள் இந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கில் செலுத்துகின்ற மற்றும் அதில் பயணிக்கின்ற ஒவ்வொருவரும் பாதுகாப்பான தலைக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.

குறித்த தலைக்கவசமானது, அணிபவரின் தலைக்கு அளவானதாக இருக்க வேண்டும். அத்துடன், நாடிப் பட்டி பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அணிபவரின் முகத்தை மறைக்கும் வகையில் பாதுகாப்பான தலைக்கவசம் அமையக் கூடாது.

பாதுகாப்பான தலைக்கவசம் ஒளித்தெறிப்பு எதுவும் இன்றி, சுலபமாக பார்க்கக்கூடியதாக தொண்ணூறு சதவீதம் தனியொரு நிறத்தில் இருத்தல் வேண்டும்.

தலைக்கவசம் தொடர்பான இலங்கையின் தராதரங்களுக்கு அமைய பாதுகாப்பான தலைக்கவசங்கள் அமைய வேண்டும் எனவும், வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவதற்கு தடை விதிக்கும் வகையில் புதிய வர்த்தமானி அறிவித்தல் உள்ளதாக குறிப்பிட்டு அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஹிரன்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top