'போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்திற்கு

உயர்ந்த பட்ச ஒத்துழைப்பை வழங்க தயார்'

- சீசெல்ஸ் ஜனாதிபதி டேனி ஃபவ்ரே

இலங்கையின் போதைப்பொருள் செயற்திட்டத்துக்கு தனது நாட்டின் உயந்த பட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக சீசெல்ஸ் ஜனாதிபதி டேனி ஃபவ்ரே (Danny Faure) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ள சீசெல்ஸ் ஜனாதிபதி டேனி ஃபவ்ரே உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். இதன்போதே மேற்கண்டவாறு சீசெல்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளாதார்.

சீசெல்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் சினேகபூர்வமாக வரவேற்கப்பட்டனர். நட்புறவு கலந்துரையாடலின் பின்னர் அரச தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இலங்கையில் போதைப்பொருள் தடுப்புக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னெடுக்கும் செயற்திட்டங்களைப் பாராட்டிய சீசெல்ஸ் ஜனாதிபதி, இரகசிய புலனாய்வு தகவல்களை பரிமாறுதல் போன்ற துறைகள் ஊடாக வழங்கக்கூடிய ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்துக்கு இவ்வாறான நட்பு நாட்டின் ஒத்துழைப்பு கிடைப்பது தொடர்பில் மகிழ்ச்சியை வெளியிட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தற்போது உலகம் பூராகவும் பயங்கரமாக பரவியுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒடுக்குவதற்கு அனைத்து நட்பு நாடுகளும் கைகோர்க்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கும் சீசெல்ஸ் நாட்டுக்குமிடையில் சுற்றுலா, மீன்பிடி, விவசாயம் போன்ற துறைகளிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பிலும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. சீசெல்ஸ் நாட்டின் கல்வி, சுகாதார மற்றும் நீதி செயற்பாடுகளுக்காக இலங்கை ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் ஆற்றும் சேவையை சீசெல்ஸ் ஜனாதிபதி பாராட்டினார்.

இலங்கையின் நீதித்துறையின் தரம் தமது நாட்டில் பெரிதும் பாராட்டப்படுவதாக குறிப்பிட்ட சீசெல்ஸ் ஜனாதிபதி தமது நாட்டினர் சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்காக இப்போது இலங்கைக்கு வருகைதருவதாகவும் குறிப்பிட்டார்.

சீசெல்ஸ் நாட்டவர்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக பெருமளவில் இலங்கைக்கு வருவதாகவும், இலங்கையின் சுகாதார துறை தொடர்பில் தமது நாட்டில் பெரும் மரியாதை இருப்பதாகவும் சீசெல்ஸ் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இருநாட்டு தூதரக உறவு நிறுவப்பட்டு மூன்றாண்டு நிறைவடைவதனை முன்னிட்டு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்குபற்றுமாறு சீசெல்ஸ் ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் ஏற்றுக்கொண்டார்.


சீசெல்ஸ் சுற்றாடல், மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கான சுற்றுலாவில் கலந்து கொண்டுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top