கிழக்கு மாகாணத்திலேயே மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர்

மன்சூர் மாத்திரம் தகுதியானவர் என

கல்வியமைச்சர் தண்டாயுதபாணி கருதுகிறாரா?

(அஸ்லம்)


மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் எம்.கே.எம்.மன்சூர் கல்வி அபிவிருத்திக்காக ஆசிரியர்களுடன் கடுமையாக நடந்து கொள்வதாகவும், கடுமையான மேற்பார்வையில் ஈடுபடுவதாகவும் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்த கருத்தானது கிழக்கு மாகாண இலங்கைக் கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கிடையே அதிருப்தியான ஒரு நிலையை ஏற்;படுத்தியுள்ளதாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கச் செயலாளர் .எல்.எம்.முக்தார் தெரிவித்துள்ளார்.

மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூரை அவ்வலயத்திலிருந்து இடமாற்றம் செய்யுமாறு அவ்வலய ஆசிரியர்கள் போராட்டம் நடாத்திய போது கிழக்கு மாகாண முதலமைச்சரின் காரியாலயத்தில் வைத்து அமைச்சர் தண்டாயுதபாணி தெரிவத்த மேற்படி கூற்றின் மூலம் கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் மன்சூரைத்தவிர ஏனைய வலயக்கல்விப் பணிப்பாளர்கள் கடுமையாக நடந்து கொள்வதில்லை எனவும், பாடசாலைய மேற்பார்வையில் ஈடுபடுவதில்லை எனவும் கருத வேண்டியுள்ளது.

அமைச்சரின் இக்கூற்றின் மூலம் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் மன்சூரின் அடாவடித்தனங்களையும், ஆசிரியர்களை துன்புறுத்துவதனையும், அவர்களை மத ரீதியாக நிந்தனை செய்வதையும் அங்கீகரித்து அவருக்கு சான்றிதழை வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாணத்திலுள்ள அதிபர்களும் ஆசிரியர்களும், கல்வி நிருவாகிகளும் தெரிவிக்கின்றனர்.

வலயக்கல்விப் பணிப்பாளர் என்பவர் அதிபர்களுடனும், ஆசிரியர்களுடனும் மிக அன்னியோன்னியமான உறவை வைத்திருக்க வேண்டியதுடன் அவர்களது உரிமையை வழங்கி அவர்களிடமிருந்து கூடிய விளைவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மாறாக அதிபர்களையும், ஆசிரியர்களையும் அவமதித்து ஆணவமாக நடந்து கொள்வதன் மூலம் வலயங்களில் கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்தமுடியாது என்பதனை கௌரவ அமைச்சர் புரிந்து கொள்ளாதது மிகவும் வேதனைக்குரியது.

கடந்த காலங்களில் மூதூர் கல்வி வலயம் மிகவும் அமைதியாகவும், அன்பான வலயக்கல்விப் பணிப்பாளர்களாலும் நிர்வாகிக்கப்பட்டு வந்தது. மூதூரின் முதலாவது வலயக்கல்விப் பணிப்பாளரான தங்கராசா, குணராசரெட்ணம், ஹாதி, குத்தூஸ், விஜயானந்தமூர்த்தி, அகிலா என்போர் ஆசிரியர்களை மதித்து அவர்கிளடமிருந்து உச்ச பலனைப் பெற்றிருக்கையில் ஜனாப். மன்சூர் மாத்திரம் இராணுவ வீரன் போன்று அடாவடித்தனமான நிருவாகம் செய்ய முற்பட்டதன் நோக்கம் என்ன? கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு வலயத்திலும் வலயக்கல்விப் பணிப்பாளர் வேண்டாம், கௌரவமான வலயக்கல்விப் பணிப்பாளர் வேண்டும் எனக் கோசம் எழுப்பிய வரலாறு மூதூர் வலயக்கல்வி அலுவலகத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி கௌரவ அமைச்சர் அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவர் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றிய போதும், மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றிய போதும், கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சில் கடமையாற்றிய போதும் தனது பதவியைப் பயன்படுத்தி தனது எதிரிகளை எவ்வாறு பழிவாங்கினார், அமைச்சிலிருந்த போது எதிரிகளின் ஆவணங்களை எவ்வாறு அபகரித்தார், அழித்தார் என்பது பற்றி நீண்ட பட்டியலை எம்மால் கௌரவ அமைச்சருக்கு சமர்ப்பிக்க முடியும்.

கௌரவ அமைச்சர் அவர்கள் மாகாணக்கல்விப் பணிப்பாளராக இருந்த சமயம் அவருக்குத் தெரியாமலேயே சில முடிவுகளை எடுத்தமையும் அது கௌரவ அமைச்சரது நிருவாகத்திற்கு பெரும் பிரச்சினையாக ஏற்பட்டமையையும் அமைச்சர் தண்டாயுதபாணி அவர்கள் அறியாத நிலையில் அவருக்கு சான்றிதழ் வழங்க முற்பட்டமையானது அப்பட்டமான பாரபட்சமாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும், அதிபர்களும் வாக்களித்து மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு கௌரவ கல்வி அமைச்சராக உயர்த்தப்பட்டு கடமை புரியும் அமைச்சர் அவர்கள் தமக்கு வாக்களித்த ஆசிரியர்களையும், அதிபர்களையும் இவ்வாறான ஒரு கொடுங்கோல் நிருவாகத்திடம் ஒப்படைக்க முனைவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல
 


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top