மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் பதவி விவகாரம்

கிழக்கு முதலமைச்சர் வழங்கிய

 வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா?

(அஸ்லம்)


மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து அகற்றப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு இறுதி நேரப் பிரயத்தனத்தில் அவர் ஈடுபட்டு வருவதாக எமக்கு மிகவும் நம்பகரமான செய்தி கிடைக்கப்பெற்றுள்ளதாக மூதூர் கல்வி வலய ஆசிரியர் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் எம்..அனஸ் தெரிவித்தார்.
மூதூர் இணக்கசபையில் கடமையாற்றும் மூன்று மதத்தலைவர்கள் மற்றும் கட்டிட ஒப்பந்தக்காரர்கள் இம்முயற்சியில் அவ்வலயத்தில் கடமையாற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் எனக்கூறிக்கொள்ளும் இலங்கை அதிபர் சேவை இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக்கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சர் ஆகியோரை கடந்த வியாழனன்று (23) சந்தித்து பேசியதாகவும் தெரிய வருகிறது.
எனினும், அவர்களது சந்திப்பு வெற்றியளிக்கவில்லை. கடந்த புதன்கிழமையன்று (22) கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து சர்ச்சைக்குரிய மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் தான் மூதூரை விட்டு வேறு வலயமொன்றிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்து அதற்கான சம்மதத்தையும் வழங்கியுள்ளார். ஆயினும், மூதூர் வலயத்தையும், வலயக்கல்விப் பணிப்பாளர்களையும் தமது விருப்பத்திற்கேற்றவாறு செயற்பட வைக்கும் குறித்த பிரதிக்கல்விப் பணிப்பாளர் எனக்கூறிக்கொள்ளும் இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்தவர் புதிதாய் வருகின்ற வலயக்கல்விப் பணிப்பாளர் தமது நடவடிக்கைக்கு இணங்கமாட்டார் எனத் தெரியவருவதையடுத்து இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
மாகாணக்கல்விப் பணிப்பாளரைச்சந்தித்த அக்குழுவில் காணப்பட்ட பௌத்த மதகுரு, மூதூர் வலய முஸ்லிம் ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமைகளில் 11.30 மணியுடன் பாடசாவை விட்டுச்சென்று மூதூர் சந்தையில் காணப்படுவதாகவும் இவ்வாறான ஒரு நிலையை ஏனைய நாட்களில் மூதூர் ஆசிரியர்கள் செய்வதாகவும், அதனைத் தடுத்தமையே ஜனாப். மன்சூரை இடமாற்றம் செய்ய காரணமாக ஆசிரியர்கள் கூறுவதாகத் தெரிவித்துள்ளார். அதன்போது மாகாணக்கல்விப் பணிப்பாளர் வந்திருந்த முஸ்லிம் மதகுருவைப் பார்த்து இது உண்மையா? வெள்ளிக்கிழமை தினங்களில் மூதூர் சந்தை, கடைகள் மூடப்படுவது இவருக்குத் தெரியாதா? இவ்வாறான அபாண்டமொன்றை இவரிடம் கூறியது யார்? எனக் கேள்வி கேட்டுள்ளார். அதன்போது இவ்வாறு கூறுமாறு அந்தப்பிரதிக்கல்விப் பணிப்பாளரும், வலயக்கல்விப் பணிப்பாளருமே எனத்தெரிவித்துள்ளார்.
மூதூர் கல்வி வலயத்திலுள்ள 665 ஆசிரியர்களில் சுமார் 480 பேர் ஜனாப். மன்சூர் வலயக்கல்விப் பணிப்பாளராக இருப்பதை விரும்பவில்லையென கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். அப்படியிருக்கையில் ஆசிரியர்களைப் பகைத்துக் கொண்டு கட்டிட ஒப்பந்தக்காரர்களினதும் இன்னும் சில சுயநலக்காரர்களினதும் துணையுடன் வலயத்தை நடாத்த முடியுமா? எனக்கேள்வி எழுப்பியுள்ளார்? பொதுவாகவே பிரச்சினைக்குரியை வலயக் கல்விப்பணிப்பாளர் தான் செல்கின்ற வலயங்களில் கட்டிட ஒப்பந்தக்காரர்களுடன் நெருக்கமான உறவுகளை பேணி வருபவர்.
இவ்வாறான நெருக்கமான உறவை சம்மாந்துறை கல்வி வலயத்தில் கடமையாற்றிய போது ஏற்பட்ட மோசடிச் சம்பவம் தொடர்பாக அவருக்கெதிரான குற்றப்பத்திரம் வழங்கப்பட்டு முறைசார் விசாரணையும் நடாத்தப்பட்டு வருகிறது. 880 தளபாடங்களை 24 மணி நேரத்திற்குள் திருத்தியதாகத் தெரிவித்து தனது பாடசாலை நண்பரான ஒரு பொறியியலாளருக்கு தளபாட திருத்தப்பணத்தை வழங்க முற்பட்ட போதே கையும் மெய்யுமாகத் தெரிய வந்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்றன. இது இடம்பெற்றது 2011 டிசம்பர் மாதம் 30ம் திகதி, பணம் கோரியது 2011 டிசம்பர் மாதம் 31ம் திகதியாகும். 24 மணி நேரத்திற்குள் 880 தளபாடங்களைத்; திருத்தியதாக கின்னஸ் சாதனையொன்று நிகழ்த்த முற்பட்டபோது இவ்விடயம் வெளியே வந்தது.

சம்மாந்துறை கல்வி வலயத்தில் இவர் கடமையாற்றிய போது ஆசிரியர்களுடனும், அதிபர்களுடனும் நல்லுறவைப் பேணவில்லை. சம்மாந்துறையிலுள்ள ஹிஜ்றா சந்தியில் வைத்து சம்மாந்துறை வலய ஆசிரியர்கள் படிப்பிக்காத கள்வர்கள் எனப் பொதுமக்களிடம் தெரிவித்து பொதுமக்களை ஆசிரியர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டதுடன் அதிபர் கூட்டமொன்றிற்கு சமூகமளிக்காத ஒரு அதிபரின் மனைவியை அக்கூட்டத்திற்கு அழைத்து வருமாறு கூறி பெரும் இக்கட்டில் மாட்டிக் கொண்டவர் இவராவார்.

அவ்வலயத்தில் கடமையாற்றிய ஒரு பிரதிக்கல்விப் பணிப்பாளரின் கடமை அறையை 2010.05.15ம் திகதி உடைத்து சேதப்படுத்தி பெரும் ரகளை புரிந்ததும் நினைவிருக்கலாம். இவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் தன்னால் எங்கும் செல்ல முடியாத நிலையில் எவ்வாறாயினும் மூதூரில் நிலைத்திருக்க விருப்பப்படுகிறார் என கல்வியதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இவர் இவ்வாறு நிலைத்திருக்கவிட்டால் அது மூதூர் கல்வி வலய ஆசிரியர்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும். எனவே, முதலமைச்சர் வாக்குறுதியளித்தவாறு மூதூர் வலயத்திலிருந்து இவரை வெளியேற்றுவது ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பானது என்பதனை கல்விப் பணிப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top