துறைமுக நகருக்கான நில மீட்பு பணிகளில் 50 வீதம் பூர்த்தி

134.5 ஹெக்ரெயர் நிலம் கடலில் இருந்து மீட்பு.

கொழும்பு துறைமுக நகரத்தை அமைப்பதற்கான, நிலத்தை உருவாக்கும் பணிகள் பாதிக்கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், நிலத்தை உருவாக்கும் பணிகள், 2019ஆம் ஆண்டு நிறைவடையும் என்றும் மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர உருவாக்கப் பணிகளை பார்வையிட்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
4பில்லியன் டொலர் சீன முதலீட்டில், உருவாக்கப்படவுள்ள துறைமுக நகரத்துக்கான, 269 ஹெக்ரெயர் நிலத்தை உருவாக்கும் பணிகளில், 50 வீதம் நிறைவடைந்துள்ளது. இதுவரை, 134.5 ஹெக்ரெயர் நிலம் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
நிலத்தை உருவாக்கும், இந்த திட்டத்தின் முதற்கட்டத்தை நிறைவேற்றும் பணிகள் 2019ஆம் ஆண்டு நிறைவடையும்.
நிலத்தை உருவாக்கும் பணிகள் நிறைவடைந்ததும், ஜனாதிபதி துறைமுக நகரப் பிரதேசத்தை நாட்டின் நிலப்பிரதேசமாக பிரகடனம் செய்வார். சட்டபூர்வமாக நாட்டின் வரைபடத்திலும் உள்ளடக்கப்படும். அதன்பின்னர் கட்டுமானப்பணிகளுக்கான அனுமதி அளிக்கப்படும்.
துறைமுக நகரத்தில் ஒரு பேர்ச் காணித்துண்டை உருவாக்குவதற்கு, 285,000 ரூபா செலவு ஏற்படும். ஒருபேர்ச் காணித்துண்டை 20 மில்லியன் ரூபாவுக்கு விற்க முடியும். 2018  தொடக்கத்தில் இந்தக் காணிகள் ஏலத்தில் விற்கப்படும்.
முன்னைய அரசாங்கம் துறைமுக நகரத்தை, பொழுதுபோக்கு மற்றும் சூதாட்ட மையமாகவே அமைக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம், நிதி நகரமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது.
இந்த துறைமுக நகரத்தில் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் முதற்கட்டமாக 1 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top