உரிமைகளை
உறுதிப்படுத்தும் யாப்பில்
பாராளுமன்றத்தை
பலப்படுத்த எதிர்பார்ப்பு
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன
பிளவுபடாத, ஒருமித்த
நாட்டிற்குள் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் ஊடாக
பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை
பலப்படுத்திக் கொள்ளும் இந்த முயற்சிக்கு இந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும்
சகல அரசியல் கட்சிகளினதும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர்
குறிப்பிட்டார். இலங்கை பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள்
நிறைவடைவதை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்
போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
70 வருட பூர்த்தி தொடர்பான பிரேணையை
பிரதமர் சபையில் முன்வைத்ததோடு எதிர்க்கட்சித்
தலைவர் அதனை வழிமொழிந்தார். இதனையடுத்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும்
குறிப்பிட்டதாவது, பாராளுமன்றத்தின்
70 வருட
பூர்த்தியானது வரலாற்றில் முக்கிய தடம் பதிக்கிறது. பிரித்தானிய ஆட்சியில் இருந்து
சுதந்திரம்பெற்ற பின்னர் சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி 1947ஆம் ஆண்டு
எமது பாராளுமன்ற முறை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும்
உறுதிப்படுத்துவதற்கு ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களும் நடவடிக்கை எடுத்தன.1948 இல்
சுதந்திரம் கிடைத்தது முதல் பாராளுமன்ற முறை உருவானது.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு எல்லையற்ற அதிகாரம்
வழங்கப்பட்டது.இதனூடாக பாராளுமன்றம் ஓரளவிற்கு பலவீனப்படுத்தப்பட்டது. 18 ஆவது
அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பாராளுமன்றமானது மிகவும் பலவீனப்படுத்தப்பட்டது.
எனினும், நாம் 2015 ஆம் ஆண்டு
நிறைவேற்றிய 19 ஆவது
அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் 18 ஆவது திருத்தம் ரத்தானதுடன் பாராளுமன்றமும் மிகவும்
பலப்படுத்தப்பட்டது.
பாராளுமன்றத்தை மேலும்
பலபடுத்த வேண்டியுள்ளது. அரசாங்கம் என்ற வகையில் புதிய அரசியலமைப்பு தொடர்பான எமது
எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் ஒருமித்த நாட்டிற்குள் சகல மக்களினதும்
உரிமைகள் பலப்படுத்தப்படும் பின்னணியில் உருவாக்கப்படும் அரசிலமைப்பொன்றின் மூலம்
பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும்.
பாராளுமன்றத்தை
பலப்படுத்திக் கொள்ளும் இந்த முயற்சிக்கு இந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும்
சகல அரசியல் கட்சிகளினதும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
எதிர்காலத்தை பற்றி
சிந்திக்கும் போது சார்க் நாடுகளுக்கிடையிலான பிராந்திய ரீதியிலான ஒத்துழைப்புகளை
மென் மேலும் நாம் பலப்படுத்த வேண்டும். சார்க் நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு
உறவுகள் மற்றும் வர்த்தக உறவுகளை பலப்படுத்தல் சார்க் நாடுகளில் ஜனநாயகத்தை ஸ்தாபித்தல்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி, சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகிய
அரசியலமைப்பிலான மூன்று விடயங்களும் எப்போதும் முரண்பாடில்லாத வகையில்
முன்னெடுக்கப்பட வேண்டும். மக்களின் இறைமையை பலப்படுத்தும் தலைமை நிறுவனம் என்ற
வகையில் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டவாக்க அதிகாரத்தை ஒருபோதும்
எவரும் சவாலுக்குட்படுத்த முடியாத வகையில் பேண வேண்டியுள்ளது.
சிறந்த நற்குணங்கள்
நிறைந்த சமூகத்தினூடாக சர்வதேச சமூகத்திற்கு எமது நாட்டைப்பற்றிய நற்செய்தியொன்றை
வழங்க வேண்டும்.
தனியொருவரிடமுள்ள
அதிகாரம் கூட்டாண்மை முறைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால் அந்த நியாய
தர்மங்களுக்குள் செயற்பட்டு நாட்டில் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு
அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் போது நீதித் துறை
சுயாதீனமாகவும் பக்கசார்பின்றியும் செயற்படுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட
வேண்டும்.
0 comments:
Post a Comment