அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குமாறு கோரி 

கைக்குழந்தைகளுடன் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குமாறு கோரி, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னாள் பட்டதாரிகள் இன்று 28 ஆம் திகதி ஆர்ப்பாட்ட மொன்றில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் நியமனம் வழங்குமாறு, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது  ஆர்ப்பாட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டது.
தமது கைக்குழந்தைகளையும் வைத்துக் கொண்டு வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க வேண்டும், அரச தொழிலில் ஏற்கெனவே இருக்கின்ற பட்டதாரிகளுக்கு மீண்டும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட கோரிக்கைகள் இதன்போது சுட்டிக்காட்டி முன்வைக்கப்பட்டன.
40புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் நியமனம் வழங்கு,எங்கள் கண்ணீருக்கு நீதிவேண்டும்,அரசியல்வாதிகளே சிந்தியுங்கள்,இன்று நாங்கள் தெருவில் நாளை நீங்கள் தெருவில்,பரீட்சையிலும் சித்தி,நேர்முகதேர்விலும் சித்தி ஏன் நாங்கள் இன்னும் வீதி ஓரத்தில் போன்ற சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணத்திற்கு பொதுவான கொள்கை இருக்கும்போது மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வழங்கப்பட்டு மிகவும் குறைந்த புள்ளிகளைப்பெற்றவர்கள் ஏனைய மாவட்டங்களில் ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்பட்ட நிலையில் அதிகளவிலான புள்ளிகளைப்பெற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் 40புள்ளிகளுக்கு மேல் பெறுவோர் ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்படுவார்கள் என்று கிழக்கு மாகாணசபையினால் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு பட்டதாரிகள் தெரிவித்தனர்.

நேர்முகம்தேர்வு போட்டிப்பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களில் பலருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் எந்த அரசியல்வாதிகளும் தங்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லையெனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
விண்ணப்பத்தில் வேறு அரச நிறுவனங்களில் நியமனம் பெற்றவர்கள் விண்ணபிக்கமுடியாது என்று கோரப்பட்டபோதிலும் பலர் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் 1,400க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் 1,119 பேருக்கே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மிகுதியான  வெற்றிடத்துக்கும் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளை நியமித்து நியமனங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளால் அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கவென நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் 6,800 பட்டதாரிகள் தோற்றியதுடன், அதில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்று 2,868  பட்டதாரிகள் சித்தியடைந்திருந்தனர். அவர்களில் 1,119 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top