வர்த்தமானிக்கு எதிரான வழக்கை
முன்கூட்டிய விசாரிக்க கோரும் மனு
– சட்டமா அதிபர் தாக்கல் செய்கிறார்
உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரும், மனுவொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய இணங்கியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மாலை நடந்த அரசியல் கட்சித் தலைவர்களின் சிறப்புக் கூட்டத்திலேயே, சட்டமா அதிபர் இந்த இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
இந்த வழக்கை எதிர் வரும் 30 ஆம் திகதி விசாரிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரவுள்ளதாக, சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். இதற்கான மனுவை வரும் திங்கட்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
இந்தியாவில் இருந்து திரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விமான நிலையத்தில் இருந்து, நேராக நாடாளுமன்றத்துக்கு வந்து இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் பங்கேற்றார்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பல்வேறு யோசனைகளை முன்வைத்திருந்தனர்.
நீதித்துறைச் செயற்பாடுகளை விரைவுபடுத்துவது முக்கியமானதொரு யோசனையாக இருந்தது. வர்த்தமானியில் உள்ள தவறினால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது மற்றொரு யோசனையாக முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment