கல்முனையின் எல்லைப் பிரிப்புக்கான பேச்சுவார்த்தையில்
கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பங்குபற்ற மாட்டார்..!
கல்முனையின் எல்லைப் பிரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெறவுள்ள கூட்டத்தில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பங்குபற்றுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது விடயமாக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், பிரதி தலைவர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த அயராத முயற்சிகள் காரணமாக உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, பூர்த்தியடைந்திருந்த நிலையில் அதனை தடுப்பதற்காக கல்முனையை நான்காக பிரிக்க வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டு, திசை திருப்பப்பட்டிருந்ததை எல்லோரும் அறிவோம்.
எவ்வாறாயினும் இவ்விடயத்தில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் நேரடியாக தலையிட்டு கல்முனையில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதன் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தமிழ், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் கல்முனையை நான்காக பிரிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கல்முனையில் உருவாக்கப்படவுள்ள தமிழ், முஸ்லிம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் தொடர்பாக பேசுவதற்கே எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனின் அலுவலகத்தில் இன்று மாலை மூன்று மணியளவில் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாய்ந்தமருது சார்பில் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களிடம் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ரிஷாத் பதியுதீன் ஆகியோரிடம் அவர் ஆலோசனை மேற்கொண்டதன் பேரில் நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையானது கல்முனையின் எல்லைப் பிரிப்பு பற்றியதாக மட்டுமே அமையவிருப்பதனாலும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு எல்லை தொடர்பில் பிரச்சினை ஏதும் இல்லாதிருப்பதனாலும் இப்பிரதேசத்தின் சார்பில் எவரும் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற தீர்மானத்தை கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மேற்கொண்டுள்ளார்.
அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பிரசன்னம் இல்லாமல் இன்று நடைபெறவுள்ள கல்முனையின் எல்லை பிரிப்பு தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படுவதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலையில் சாய்ந்தமருது பிரதிநிதிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கருத்துகள் சொல்வதற்கோ வேறு ஏதும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கோ எந்தவொரு தேவையும் கிடையாது என கருதப்படுகிறது.
சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்துவதற்காக தான் அங்கம் வகித்திருந்த கட்சியின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் கிழக்கு மாகாண சபையில் பிரேரணை கொண்டு சென்று நிறைவேற்றியது தொடக்கம் அண்மையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது வரை கலாநிதி ஏ.எம்.ஜெமீல்
மிகவும் அர்ப்பணிப்புடன் பல்வேறு வகையிலும் முழுமூச்சாக உழைத்து வருகிறார் என்பதை பொறுப்புடன் சுட்டிக்காட்டுகின்றோம்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment