ஓக்கிபுயலின் கோரத் தாண்டவம்

கொழும்பு நகரில் பாரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன

வங்கக் கடலில் உருவான ஓக்கி (OCKHI) புயல் இலங்கையைக் கடந்து சென்ற போது, வீசிய சூறைக்காற்றினாலும், கொட்டிய மழையினாலும், குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓக்கி புயல் தற்போது கொழும்புக்கு மேற்கே  நகர்ந்து 600 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
எனினும், அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், வடக்கு, வடமத்திய, ஊவா, தென், மேல், சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் 100 மி.மீற்றருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு கடும் மழை, சூறைக்காற்று குறித்து அவதானமாக இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு, ஓக்கி புயல், காலி தொடக்கம் கொழும்பு வரையான பகுதியைக் கடந்து சென்ற போது கனமழையுடன் சூறைக்காற்று வீசி பெரும் சேதங்களை விளைவித்தது.
கொழும்பு நகரில் பாரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும், விளம்பரப் பலகைகளும் தூக்கி வீசப்பட்டன. மின்சாரம் தடைப்பட்டது. நேற்றும் தொடர்ந்து மழையும், காற்றும் நீடித்தது.
இதனால் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர் என்றும், குறைந்தது 23 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.1 1மாவட்டங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓக்கி புயலினால் தென், மற்றும் மேல் மாகாணங்களிலும் மலையகப் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென நேற்றுமுன்தினம் இரவு புயலாக மாறி அரபிக் கடலை நோக்கி நகர்ந்த போதே இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டன.

அமெரிக்க வானிலை முன்னெச்சரிக்கை மையம், இலங்கையை புயல் தாக்கக் கூடும் என்று ஒரு வாரத்துக்கு முன்னரே எச்சரித்திருந்த போதிலும், அதிகாரிகள் அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top