ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு
–ஜனாதிபதியை விமர்சிப்பதற்குத் தடை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கூட்டு அரசாங்கத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எந்த கருத்தையும் பகிரங்கமாக வெளியிட வேண்டாம் என்றும், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, எதிர்காலத்தில் தனது ஒப்புதலின்றி செய்தியாளர் சந்திப்புகளை நடத்தக் கூடாது என்றும் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பாக கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து திரும்பிய பின்னர், ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்புத் தொடர்பான விபரங்களையும் ரணில் விக்கிரமசிங்க இந்தச் சந்திப்பில் எடுத்துக் கூறினார்.
கூட்டு எதிரணியுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடத்தும் பேச்சுக்களை தடுக்க முடியாது என்றும், அவ்வாறு செய்தால் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் தலைவராக தான் அடையாளப்படுத்தப்படுவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார் என்றும் ரணில் விக்கிரமசிங்க இநதக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஐதேகவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தாள முற்படுகிறார் என்று பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, நிக்கவரெட்டியவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, ஊழல், மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது, தன்னை விமர்சனம் செய்தால் பதவிகளைக் கைவிட்டு ஊழல், மோசடிகளுக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடுவேன் என்று எச்சரித்திருந்தார்.
இதனால் கூட்டு அரசாங்கத்துக்குள் விரிசல்கள் அதிகமாகி வந்த நிலையிலேயே, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாய்ப்பூட்டுப் போட்டுள்ளார்.
0 comments:
Post a Comment