சைபர் வெளியில் நல்லாட்சி அமுலாக வேண்டும்
சைபர் வெளி மாநாட்டின்
ஆரம்ப வைபவத்தில் பிரதமர் ரணில்
நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை - இந்திய கூட்டு முயற்சியுடனான திட்டங்களை மிக விரைவாக செய்து முடிக்கும் பொருட்டான பிரயத்தனங்களை எடுப்பதற்கு இலங்கை தயாராகவுள்ளதாக இதன் போது பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று (23) டெல்லியில் இடம்பெறும் ஐந்தாவது உலக சைபர் வெளி மாநாட்டின் ஆரம்ப நிகழ்விலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.
உலகின் 135 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் இம்முறை மாநாட்டில் கலந்துகொள்வதுடன், உலகம் முழுவதும் 2800 இடங்களில் இருந்து அதிகளவானோர் இந்த மாநாட்டுடன் நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்துகின்றனர்.
இவ்வைபவத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போது தோன்றியுள்ள சிறு சிறு பிரச்சினைகளை மிக விரைவாக முடிவுக்கு கொண்டு வர முடியும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தற்காலத்தில் தகவல் மற்றும் அறிவைப் பெற்றுக் கொள்ளும் பிரதான மேடையாக சைபர் வெளி மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தல், மானிட அபிவிருத்தி மற்றும் சமூக மறுசீரமைப்புச் செயற்பாட்டின் பிரதான அளவுகோலாக சைபர் வெளி மாறியுள்ளதாகத் தெரிவித்த விக்கிரமசிங்க, இதன் காரணமாக மனித சமூகத்திற்கு புதிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டினார்.
மானிட சுதந்திரம் மற்றும் உரிமைகள், தனிப்பட்ட சுதந்திரம் போன்ற துறைகளில் இந்த சவால்களை அதிகளவில் சைபர் வெளியூடாக முகங்கொடுக்க வேண்டியிருப்பதால் சைபர் ஒழுக்க நெறிமுறைகள் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டிய காலம் உருவாகியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
சுதந்திரமாகத் தகவல்கள் வெளிவருதல் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் என்பவற்றுக்கிடையே சமநிலையை ஏற்படுத்துவதற்கு சைபர் வெளியில் நல்லாட்சி அமுலாக வேண்டும் என்பது தனது நம்பிக்கை எனவும் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதன் ஊடாக இணையத்தள நடுநிலைமைத் தன்மையை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் சைபர் வெளியில் முன்னேற்றகரமான, புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் இலங்கையின் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி,
ஒருபுறத்தில் அந்தரங்கம் மற்றும் வெளிப்படைத்தன்மையைச் சமநிலைப்படுத்திக் கொண்டும், மறுபுறத்தில் அடிப்படைவாத, தீவிரவாத கருங் குதிரைகளுக்கு டிஜிட்டல் தளத்தைத் திறந்து விடாமலும், டிஜிட்டல் தொழிநுட்பத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சைபர் வெளி உலக மாநாட்டினை ஆரம்பித்து வைத்துக் குறிப்பிட்டார்.
இன்று (23) புதுடில்லி நகர புல்மன் ஹோட்டலின் எரோசிட்டியில் இடம்பெற்ற சைபர் வெளி உலக மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் மேலும் உரையாற்றிய மோடி, இந்தியா டிஜிட்டல் தொழிநுட்பம் ஊடாக ஊழல்களை ஒழிக்கவும் அநாவசிய செலவுகளைக் குறைக்கவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்தார்.
டிஜிட்டல் தொழிநுட்பத்தை நல்லாட்சிக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ள முறைமை தொடர்பாகவும், அதன் ஊடாக இந்தியா பெற்றுக் கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பாகவும் இந்தியப் பிரதமர் இங்கு விரிவாகக் கருத்துக்களை விளக்கினார்.
உலகம் ஒரே குடும்பம் என்பது இந்தியாவின் பழையதோர் பழமொழி எனக் குறிப்பிட்ட மோடி, அந்தப் பழமொழியை நவீன உலகுடன் இணைத்து கொள்வதற்கு டிஜிட்டல் தொழிநுட்பம் ஊடாக சிறந்த வாய்ப்புக் கிடைப்பதாக குறிப்பிட்டார்.
ஜனநாயகத்தைப் பலப்படுத்தவும், மனிதாபிமானத்துடன் கூடிய தொழிநுட்ப முறைமைகளை மேம்படுத்தவும் சைபர் வெளி ஊடாக கிடைக்கும் சந்தர்ப்பங்கள் தொடர்பாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இலட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு சேவைகளை வழங்கும் ஜன் தான் - ஆதார் டிஜிட்டல் செயல்முறை தொடர்பாகவும் இந்தியப் பிரதமர் விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.
இதில் நிதி மற்றும் வங்கிச் சேவைகள், உதவி வசதிகள் என்பவற்றைக் கையடக்கத் தொலைபேசி ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதே இடம்பெறுகிறது.
இது கிராமப்புற மக்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்றுள்ளதுடன், இடைநிலை ஊழல்கள் பலவற்றை இதன் ஊடாக் தடுக்க முடிந்துள்ளதாகவும் பிரதமர் மோடி இங்கு தெரிவித்தார்.
சைபர் வெளி உலக மாநாட்டினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் விசேட விருந்தினராக கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
இந்திய அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் "யுமன்ங்" எனப்படும் புதிய யுகத்தின் அரசாட்சி தொடர்பான இணைந்த கையடக்கத் தொலைபேசி ஒருங்கினை (UMANG - Unified Mobile Application for New-age
Governance) அறிமுகப்படுத்தும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
இந்தியா மற்றும் டிஜிட்டல் தொழிநுட்பம் தொடர்பான இரண்டு நூல்களின் ஈ - வெளியீடு, டிஜிட்டல் துறைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு என்பனவும் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றன.
0 comments:
Post a Comment