பர்கரைவிட ஆரோக்கியமானதா சமோசா?’
என்ன சொல்கிறது உணவியல்?
ஹோட்டல்கள் தொடங்கி சாதாரண டீ கடைகள் வரை தவறாமல் இடம்பிடித்திருக்கும் நொறுக்குத்தீனி சமோசா. காலையில் தயார் செய்துவிட்டால், இரவு வரை கடைகளில் இதை விற்பனைக்கு வைத்திருப்பதைப் பார்த்திருப்போம்.
டீயுடன் சேர்த்துச் சாப்பிடுவது, சமோசாவின் மணத்துக்காக சாப்பிடுவது, மொறுமொறுப்புத் தன்மைக்காகச் சாப்பிடுவது... என கிராமங்கள், நகரங்கள் வித்தியாசம் இல்லாமல், அனைத்து ஊர்களிலும் சமோசாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.
டெல்லி சுல்தான்களுக்காக சமைக்கவந்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த சமையல்காரர்களின் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்த சமோசா இலங்கைக்குள்ளும் நுழைந்துவிட்டது. வட இந்திய நொறுக்குத்தீனிகளில் முக்கியமானவற்றில் ஒன்று சமோசா. `இதைத் தயாரிக்கும்விதம் எளிது. இருந்தாலும், இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளே ஏராளம்’ என பல ஆய்வுகளும் மருத்துவர்களும் சொல்லிவந்திருக்கிறார்கள்.
இப்படி பல முரண்பாடான கருத்துகளைப் பலர் முன்வைத்திருந்தாலும், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரோன்மென்ட் (Centre for Science and Environment) அமைப்பு, `பர்கருடன் ஒப்பிடும்போது, சமோசா ஆரோக்கியமான நொறுக்குத்தீனி’ என அண்மையில் அறிவித்திருக்கிறது. `அப்படி என்ன நல்லது இருக்கிறது சமோசாவில்... பர்கர் என்ன மோசமா... உண்மையில் சமோசா ஆரோக்கியமானதுதானா?’
பர்கர்... முட்டை, கடுகு, வொர்செஸ்டர்ஷைர் சாஸ் (Worcestershire sauce), வெங்காயம், பூண்டு, மிளகு, இறைச்சி, தாவர எண்ணெய், சோயா எசென்ஸ், சீஸ், உருளைக்கிழங்கு,
மையோனைஸ் (Mayonnaise) போன்றவற்றைக் கொண்டு இனிப்பு மற்றும் புளிப்பு சுவை சற்றுத் தூக்கலாகக் கலந்து செய்யப்படுவது.
கொழுப்பு, இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் பி 12 போன்ற ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்துள்ளன. இவை ரத்த சிவப்பணுக்களின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. ஆக்சிஜன் உடல் முழுவதும் பரவ வழிவகுக்கும். தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். ஆனாலும் இது ஏற்படுத்தும் தீங்குகளும் அதிகமே.
உடலில் கொழுப்பின் அளவைக் கூட்டும். அது உடல் எடையை அதிகரிக்கும். இதன் காரணமாக உடல் பருமன் பிரச்னை ஏற்படலாம். பர்கரில் சோடியத்தின் அளவு அதிகம். அதனால் இது, உயர் ரத்த அழுத்தப் பிரச்னையை வரவழைக்கும். இதன் காரணமாக இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
தொடர்ந்து பர்கர் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம் (Stroke) ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உண்டு. பொதுவாகவே பர்கர் சாப்பிடும்போது சைடுடிஷ்ஷாக ஃபிரெஞ்ச் ஃப்ரை போன்ற எண்ணெயில் பொரித்தவற்றைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். சிறிய அளவிலான பர்கரை ஆர்டர் செய்து, அதற்கு சைடுடிஷ்ஷாக வெஜிடபுள் சாலட், வால்நட், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
`உள்ளே வைக்கப்படும் மசாலாவைப் பொறுத்து சைவம், அசைவம் என இரண்டு வகை சமோசாக்கள் உள்ளன. அவரவரின் விருப்பத்துக்கு ஏற்ப முறைகளும், மசாலாவில் சேர்க்கப்படும் பொருள்களும் மாறுபடும். பொதுவாக, சைவ மசாலா உருளைக்கிழங்கு, பட்டாணி, பச்சைமிளகாய், வெங்காயம் போன்றவை கலந்து செய்யப்படுகிறது.
அசைவத்தில் ஆடு, மாடு, கோழி என இறைச்சியால் செய்யப்பட்ட மசாலா பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பெரும்பாலும் சைவ சமோசாதான் புழக்கத்தில் உள்ளது. சமோசாவுடன் வினிகர் சேர்த்தால், மூன்று நாள்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
இதில் சர்க்கரை நோயாளிகளின் குட்டி எதிரியான உருளைக்கிழங்கு இருக்கிறது. மைதாவில் உள்ள கிளைசெமிக் இண்டெக்ஸ் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். கொழுப்பைக் கூட்டும்.
எண்ணெயில் சமைத்த சமோசா ஒருபுறமிருக்க, மறுபுறம் பொரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய்களே நம் ஆரோக்கியத்தை அசைத்துப் பார்க்கும். கடைகளில் பொரிக்கப்படும் சமோசாவை எந்த எண்ணெயில் செய்கிறார்கள் என்பதே கேள்விக்குறி.
அதுபோல அந்த எண்ணெய் எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறது, எந்த எண்ணெயுடனாவது கலக்கப்படுகிறதா... என அது குறித்து ஆயிரம் எண்ணங்கள் எழும். ஒரே எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால், அது `ட்ரான்ஸ் ஃபேட்’ எனப்படும் கெட்ட கொழுப்பை உருவாக்கும். திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் எண்ணெயில் உள்ள ஹைட்ரஜன், உணவோடு சேரும். இதுவே ட்ரான்ஸ் ஃபேட்டுக்குக் காரணம். எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் உடலுக்குத் தீங்கு என்று சில நாடுகளில் மைக்ரோவேவ் அவனில் செய்வார்கள். ஆனால், அதுவும் தவறான முறையே.
அதிக கொலஸ்ட்ரால், தொப்பை, செரிமானக் கோளாறு, கெட்ட கொழுப்பு என சமோசாவால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஏராளம்.
சர்க்கரை நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதைச் சாப்பிட்டால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களின் பிரச்னைகள் தீவிரமாகும்.
மலைபோல் குவியும் பக்கவிளைவுகளுக்கு மத்தியில் விரல்விட்டு எண்ணும் அளவு நன்மைகளும் சமோசாவில் உள்ளன. அவை,
* சமோசா சாப்பிட்டால் மூன்று மணி நேரத்துக்குப் பசியைத் தள்ளிப்போடலாம்.
* ஒரு சின்ன சமோசாவில் 240 கலோரிகள் உள்ளன. இதனால் ஆற்றல் மட்டுமே கிடைக்கும்.
* மைதாவுக்குப் பதிலாக அரிசி, கோதுமை மாவைப் பயன்படுத்தலாம். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். உடல் எடையைச் சீராக வைத்திருக்க உதவும்.
* சமோசாவில் சேர்க்கப்படும் காய்கறிகளில் வைட்டமின் சத்துகளும் தாது உப்புக்களும் நிறைந்துள்ளன. இவை நாள்பட்ட நோய்களான இதய நோய், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், எலும்பு அடர்த்தி குறைவு, சர்க்கரைநோய், சிறுநீரகக் கல் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.
வீட்டு சமோசாவுக்கு வெல்கம் சொல்வோம்!
நம் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துவிட்ட டீ, காபி, சமோசா, போண்டா, பஜ்ஜி... என எதுவாக இருந்தாலும் வீட்டில் சமைத்துச் சாப்பிடும்போது அதன் சுவையும் குணமும் ஒருபடி உயரும். ஆகவே, சமோசா சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், வீட்டிலேயே செய்யலாம். நல்லெண்ணெயில், ஆரோக்கியமான காய்கறி மசாலா ஸ்டஃப்புடன் கோதுமை மாவு, அரிசி மாவு பயன்படுத்திச் செய்து சாப்பிடலாம்.
உணவு நஞ்சாவதைத் தவிர்க்க வேண்டுமானால், எந்த உணவுப் பொருளானாலும் சமைத்த நான்கு முதல் ஐந்து மணி நேரத்தில் சாப்பிட்டுவிட வேண்டும்.
0 comments:
Post a Comment