வட்டமடு விவசாயிகளுக்கு ஆதரவாக

அக்கரைப்பற்றில் ஹர்த்தால்

வட்டமடு விவசாயக் காணியில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு விதிக்கபட்டுள்ள தடையை அரசாங்கம் நீக்குமாறு கோரிக்கை விடுத்து அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று 27 ஆம் திகதி திங்கள்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
மேற்படி ஹர்தாலுக்கான அழைப்பை வட்டமடு பிரதேசத்தின் நான்கு விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து விடுத்திருந்தன.
இந்த ஹர்த்தால் காரணமாக கடைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டிருந்தன. ஆயினும் வங்கிகள் மற்றும் பாடசாலைகள், அரச திணைக்களினதும் வழமையான நடவடிக்கைகள் இடம்பெற்றதாக அறிவிக்கப்படுகின்றது.  
வட்டமடு விவசாயிகள் தமது காணிகளில் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு தெரிவித்து கடந்த வாரம் முதல் ஆர்ப்பாட்டங்களையும், வீதிமறியல் போராட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்திவந்த  நிலையில் இன்று 27 ஆம் திகதி  திங்கட்கிழமை ஹர்த்தால், கடையடைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முஸ்லிம்களின் சுமார் 1,500 ஏக்கர் காணியில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாமல் வனபரிபால திணைக்களம் தடைவிதித்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
1968 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காடுவெட்டி விவசாயம் மேற்கொண்டு வந்துள்ள தமது விவசாய நிலங்கள் கடந்த யுத்த காலத்தின் போது செய்கை பண்ணப்படாமல் காடுகள் வளர்ந்து வனாந்தரமாக மாறி இருந்ததாகவும் கூறுகின்றனர்.
யுத்தம் முடிவுற்று தமது காணிகளை அடையாளப்படுத்தி பல தடவைகள் விவசாயம் செய்யப்பட்டு வந்த போதிலும் அண்மைக்காலமாக அது வனப் பிரதேசம் என தெரிவித்து தடைவிதிக்கப்பட்டு வருகின்றது.
நல்லாட்சியை கொண்டு வந்த முஸ்லிம்களுக்கு இதுவரை எந்தத் தீர்வையும் இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுக்கவில்லை என்றும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிகாரிகள் இனவாதப் போக்குடன் செயற்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விவசாயக் காணிகளை பெற்றுத்தர எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததன் காரணமாக இந்த ஹர்த்தால் நடவடிக்கை ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி விவசாயிகள்  பேரணி ஒன்றை  நடாத்தியதுடன், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

வட்டமடு விவசாயிகள் இன்று தொடர்ச்சியாக 24 ஆவது நாளாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top