ரூபா 2 கோடி இலஞ்சம் பெற முயன்ற
ஜனாதிபதி செயலக உயரதிகாரி உள்ளிட்ட இருவர் கைது



ரூபா 2 கோடி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதிசெயலகத்தின் பிரதானி பேராசியர் .எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திசாநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து, இலஞ்சத் தொகையை பெற்றுக்கொள்ளும்போது குறித்த இருவரும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறுவனமொன்று தொடர்பிலான பண பரிமாற்றம் தொடர்பில் ரூபா 10 கோடி பணத்தை இலஞ்சமாக கோரி, அதில் ரூபா 2 கோடி பணத்தை முற்பணமாக பெறுவதற்கு முயற்சி செய்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேராசிரியர் .எச்.கே. மஹானாம, காணி அமைச்சின் முன்னாள் செயலாளர் என்பதோடு, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி எனும் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை இந்திய வணிகர் ஒருவரிடம் இருந்து, இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கந்தளாய் சீனித் தொழிற்சாலை காணியை கொள்வனவு செய்த இந்திய வணிகர், தொழிற்சாலைக்கான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கும், கட்டடங்களைப் பெற்றுக் கொள்வதற்கும், முயன்ற போது, இந்த இரு அதிகாரிகளும் அதற்காக இலஞ்சம் கோரியுள்ளனர்.

இதற்கான ஒழுங்குகள் மற்றும் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு 540 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளது. நீண்ட பேரங்களை அடுத்து, 100 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.
முதற்கட்டமாக நேற்று மாலை 20 மில்லியன் ரூபா இலஞ்சம் கொடுக்கப்பட்டது. இதுபற்றி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இந்திய வணிகர் தகவல் அளித்தார்.
உடனடியாக செயற்பட்ட ஆணைக்குழு அதிகாரிகள், கொழும்பில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் முதற்கட்ட இலஞ்சப் பணம் கைமாற்றப்பட்ட போது, இரண்டு சிரேஸ்ட அதிகாரிகளையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட போது, இருவரும், இலஞ்சப் பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததாக ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அரச அதிகாரியான மகாநாம, தற்போது ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக பணியாற்றுகிறார். முன்னர் இவர், காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலராகப் பணியாற்றினார்.
மூன்று மாதங்களுக்கு முன்னரே இவர் ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இரண்டாவது சந்தேக நபரான பி. திசநாயக்க, சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியா இருந்த போது, அவரது செயலாளராக பணியாற்றியவர். தற்போது அரச மரக் கூட்டுத்தாபன தலைவராக இருக்கிறார்.
கைது செய்யப்பட்ட இரண்டு சிரேஸ்ட அரச அதிகாரிகளும் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top