சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின்
அபிவிருத்திச் சபை புனரமைக்கப்படல் வேண்டும்
இன்று மக்களால் நடத்தப்பட்ட எழுச்சி போராட்டம்



சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட்டு இங்கு வாழும் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க வைத்தியசாலை அபிவிருத்திச் சபை மிகவும் அத்தியாவசியமானது என்பதால் மிக நீண்டகாலமாக செயலிழந்த நிலையில் மந்தகதியில் இயங்கும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உடனடியாகப் புனரமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் மக்கள் எழுச்சி போராட்டம் இன்று 2018.05.12 - சனிக்கிழமை சாய்ந்தமருதில் நடைபெற்றது.
வைத்தியசாலை முன்றலில் ஒன்றுகூடிய இளைஞர்களும் பொதுமக்களும் வைத்தியசாலையின் வீழ்ச்சிக்கும், சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட எக்ஸ்ரே மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் வேறு வைத்தியசாலைக்கு மாற்றபடவும், சாய்ந்தமருது வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைக்க நடவடிக்கை எடுத்தமை என்பவற்றுக்கு  ஒத்தாசையாக இருந்து செயல்படும்
தற்போதைய வைத்தியசாலை அபிவிருத்திச் சபையைக் கலைத்து சாய்ந்தமருதில் வாழும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதற்காக பரவலாக விண்ணப்ப படிவங்களை வழங்கி பல்துறை சார்ந்த புதிய அங்கத்தவர்களையும் இணைத்து அபிவிருத்திச் சபை புனரமைக்கப்பட வேண்டும் என பலத்த கோஷங்களை போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் எழுப்பினர்.
இந்நிலையில் சாய்ந்தமருது சுயேற்சை குழு சார்பாக கல்முனை மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஸ்தலத்திற்கு வருகைதந்து பொதுமக்களுடன் உரையாடி பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்தனர். இதன் பின்னர் பிரதேச வைத்திய அதிகாரியைச் சந்தித்த உறுப்பினர்கள் மக்களின் கோரிக்கை தொடர்பில் வைத்திய அதிகாரியுடன் கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் பொதுமக்கள் மத்திய பேசிய வைத்திய அதிகாரி "சாய்ந்தமருது முழுவதும் விண்ணப்பங்களை விநியோகித்து புதிய உறுப்பினர்களை இணைத்து மிக விரைவில் அபிவிருத்திச் சபையை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாக" உறுதி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை அபிவிருத்திச் சபைக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் பொருட்டு அங்கத்துவ வாரம் பிரகடணப்படுத்தியுள்ளதாகவும் அதற்கமைய ரூபா 1000/- சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் சாய்த்தமருது மக்கள் வங்கியிலுள்ள நடைமுறைக்  கணக்கில் செலுத்தி வைப்புச் சீட்டை வைத்தியசாலையில்  சமர்ப்பித்து விண்ணப்பங்களை பெறுமாறும் அண்மைய காலங்களில் ஒரு செய்தி தற்போதய வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளரால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், குறித்த வங்கிக் கணக்கு வங்கியில் நடைமுறையில் இல்லை எனவும் அக்கணக்கு  மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top