வில்பத்துவின் உண்மை நிலையை கண்டறியுங்கள்
பொன்சேகாவிடம், றிஷாட்பதியுதீன் வேண்டுகோள்



வில்பத்துக் காட்டை அழித்து மக்களை சட்டவிரோதமாகக் குடியேற்றுவதாக தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதுமான இனவாதிகளின் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும், பொய் பிரச்சாரத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து, இது தொடர்பிலான உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10/05/2018) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சரிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, அமைச்சர் றிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் றிஷாட் பதியுதீன் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
வில்பத்துவில் ஓரங்குல நிலமேனும் முஸ்லிம்களால் அங்கீகரிக்கப்படவில்லை. இது அப்பட்டமான பொய் ஆகும். இது தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய வேண்டுமெனவே நாம் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கின்றோம்.
அமைச்சர் சரத் பொன்சேகா இந்த விவகாரம் தொடர்பில் கவனஞ்செலுத்துவார் என நம்புகின்றேன். எவராவது வில்பத்துக் காணியை அழித்திருந்தாலோ, அதில் குடியேறி இருந்தாலோ அவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த விடயத்தில் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவன் என்ற வகையில், நானும் பூரண ஒத்துழைப்பை வழங்குவேன். இவ்வாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top