பாராளுமன்ற புதிய அமர்வில்

ஜனாதிபதியின் அங்குரார்ப்பண உரை






எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் சம்பிரதாயபூர்வமாக  ஆரம்பித்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி உரையாற்றினார்.
பாராளுமன்ற புதிய அமர்வில் ஜனாதிபதியின் அங்குரார்ப்பண உரை பின்வருமாறு:
 கௌரவ சபாநாயகர் அவர்களே,
கௌரவ பிரதமர் அவர்களே,
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 08 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பமாகும் இவ்வேளையில் அதில் கலந்துகொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் இலங்கை ஜனாதிபதி என்ற வகையிலும் அரசின் தலைவர் என்ற வகையிலும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

2018 ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி என்னால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பின் 70ஆவது சரத்தின் கீழ் எனக்கு கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரங்களுக்கு அமைய 08 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த 08 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 07 ஆவது மற்றும் 32, 33 ஆவது சரத்துக்களுக்கு அமைய இன்றைய தினம் இவ்வாறு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகின்றது என்பதை அறிவிக்கின்றேன். இதன்போது, நமது நாட்டின் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய ஒரு பாராளுமன்ற அமர்வினை முடித்து வைத்து புதிய பாராளுமன்ற அமர்வினை ஆரம்பித்து வைப்பதே நிகழ்கின்றது.
2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி, எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஆரம்பித்து வைத்து என்னால் முன்வைக்கப்பட்ட கொள்கை அறிக்கையின் தொடர்ச்சியாகவே இன்றைய இந்த அறிக்கையையும் முன்வைக்கின்றேன்.
குறிப்பாக தற்போதைய அரசுக்கு ஆணையினை பெற்றுக்கொடுத்த மக்களின் முக்கிய வேண்டுகோளாக இருந்த, இலங்கை சமூகத்தை மீண்டும் ஜனநாயக மயப்படுத்தி மனிதநேயமும் பொறுப்பும் மிக்க ஒரு சமூகமாக உருவாக்க வேண்டும் என்ற விடயத்தை கடந்த மூன்று வருடங்களுள் சிறந்த முறையில் அல்லது நேர்த்தியாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பதை விமர்சனங்களுக்கு மத்தியிலும் நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.
2015 ஜனவரி 08 ஆம் திகதி இந்த நாட்டு மக்களினால் ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்குறிப்பிட்ட ஜனநாயக ரீதியிலான அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக அச்சமயம் செயலில் இருந்த 7 ஆவது பாராளுமன்றத்தினாலும் இந்த சபையினை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 ஆவது பாராளுமன்றத்தினாலும் பெற்றுக் கொடுக்கப்பட்ட ஒத்துழைப்பினை நன்றியுணர்வுடன் இத்தருணத்தில் நான் ஞாபகப்படுத்துகிறேன்.
2015 ஜனவரி 08 ஆம் திகதி எனது தலைமைத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தினுள் செயற்பட்ட 7ஆவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில மக்கள்நேய சட்ட திட்டங்கள் இருக்கின்றன.

2015 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருள் தேசிய அதிகார சபையினை நிறுவுவதற்கான மாற்றம் செய்யப்பட்ட சட்டதிருத்தம்
2015 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தேசிய ஒளடத சட்டம்
2015 மே மாதம் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பின் 19 ஆவது சீர்திருத்தம் ஆகியன இங்கு குறிப்பிடத் தக்கவையாகும்.
குறிப்பாக இங்கே குறிப்பிடப்பட்ட சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டமை இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வுகளாகும். அதற்கு அடித்தளமாக அமைந்த இரண்டு முக்கிய விடயங்கள் மீது இங்கே எனது கவனத்தை செலுத்த விரும்புகிறேன்.
நாட்டினதும் நாட்டு மக்களினதும் அபிவிருத்திக்காக பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் எவ்வித தடங்கல்களும் இன்றி தேசிய இணக்கப்பாட்டுக்காக ஒன்றுகூடியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 2015 ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையில் செயற்பட்ட 7 ஆவது பாராளுமன்றத்தின் அமைவு பற்றி நோக்கும்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு 142 ஆசனங்கள் இருந்த அதேவேளை பாராளுமன்றத்தின் பிரதமரை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சிக்கு 47 ஆசனங்களே இருந்தன. எவ்வாறாயினும் காலம் காலமாக பாராளுமன்றத்தில் காணப்படுகின்ற பகைமை அரசியலை ஒருபுறம் வைத்துவிட்டு தேசிய தேவைகளை நிறைவேற்றும் வகையில் எமது நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு ஒன்றுபட்டு செயற்பட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் நாட்டினுள் குவிந்து கிடக்கின்ற தீராத தேசிய மட்டத்திலான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டினுள் காணப்படுகின்றது என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டது.

அதற்கமைய,

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக யதார்த்தமாக்கிக் கொள்ள முடியாதிருந்த சேனக்க பிபிலே அவர்களின் ஒளடதக் கொள்கை இன்று யதார்த்தமாகி இருக்கின்றது.
சிகரட்டின் தாக்கம் பற்றிய 80 சதவீதம் படங்களிலான எச்சரிக்கை, புதிய புகையிலை மற்றும் போதைப்பொருள் சட்டத்தின் மூலம் செயற்படுத்தப்பட்டிருக்கின்றது.
இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஓர் அரசியல் விடயத்திற்காக ஒன்று திரட்டப்பட்ட அதிகபட்ச எதிர்ப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு எதிராகவே எழுந்தது. ஆயினும் அன்றுமுதல் இன்றுவரை நிறைவேற்று அதிகாரத்தை எதிர்த்த எவருமே அதன் அதிகாரங்களை குறைக்க முன்வரவில்லை. மாறாக அதன் அதிகாரங்களை தான்தோன்றித்தனமாக அதிகரித்துக் கொள்வதே வழக்கமாக இருந்தது. 2015 மே மாதம் 15 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு அமைய சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்தாது குறைக்கக்கூடிய ஆகக்கூடிய அதிகாரங்களை குறைக்க, அகற்ற முடிந்தமை இந்த இணக்கப்பாட்டு அரசியலின் உண்மையான பலமாகும்.
ஜனவரி 08 ஆம் திகதி ஆரம்பமான அரசியல் மாற்றத்தை மேலும் யதார்த்தமாக்கும் வகையில் 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட பாராளுமன்ற பொதுத்தேர்தலின் பின்னர் 08 ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவான பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்பட்டிருக்கின்றார்கள் என்பதையிட்டு அவர்கள் மீதான கௌரவம் கலந்த நன்றியுடன் தெரிவிக்கிறேன்.

அக்காலப்பகுதியில் உங்களால் நிறைவேற்றப்பட்ட சட்டதிட்டங்களில் பெரும்பாலானவை நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்பவையாகவே அமைந்தன. அதற்கமைய கடந்த மூன்று வருடங்களில் முன்வைக்கப்பட்ட இரண்டு ஒதுக்கீட்டுச் சட்டங்களுக்கு மேலதிகமாக பொருளாதார துறையை சார்ந்த 18 சட்டங்கள் உங்களால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்த அனைத்து சட்டதிட்டங்களும் எம்முன் இருக்கின்ற 10.3 ரில்லியன் (பத்து லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான) மாபெரும் கடன் சுமையை முகாமைத்துவம் செய்யும் நோக்கிலேயே ஆகும். அத்தோடு நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தேவையான இன்னும் பல சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. பேச்சு சுதந்திரத்தை பலப்படுத்தும் வகையில் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் சட்டம் இன்று குடிமக்களுக்கு கிடைத்திருக்கின்ற ஆசியாவிலேயே பலம்மிக்க சட்டமாக கருதப்படுகின்றது.

சர்வஜன வாக்குரிமையை யதார்த்தமாக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் எமது உள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றியிருக்கிறோம்.

அத்தோடு பேண்தகு அபிவிருத்தியை யதார்த்தமாக்கிக் கொள்ளும் வகையில் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பேண்தகு அபிவிருத்தி சட்டத்தினை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது.

இடைக்கால நீதி மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்கில் காணாமல்போனோர் பற்றி கண்டறியும் அலுவலகம் பற்றிய சட்டம் மற்றும் பாதிக்கப்பட்ட மற்றும் குற்றவியல் வழக்கு சாட்சியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட சட்டம் ஆகியவற்றை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

இந்த அரசாங்கம் தமது ஆட்சிக் காலத்தினுள் மக்களுக்காக பெற்றுக் கொடுத்திருக்கும் பல வெற்றிகளைப் பற்றி இங்கு கவனத்தில் கொண்டுவர வேண்டுமென நான் நம்புகிறேன்.

2010 ஆம் ஆண்டு முதல் நாடு இழந்திருந்த ஜிஎஸ்பி வரிச்சலுகையினை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது. அதன்மூலம் 6600 பொருட்கள் தொடர்பில் நாட்டுக்கு நன்மை பயக்க முடிந்திருப்பதுடன் மொத்த வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடிந்திருக்கின்றது. ஆடை மற்றும் மீன் ஏற்றுமதி இவற்றுள் முதலிடம் வகிக்கின்றன.

பெருநகர அபிவிருத்தி மற்றும் துறைமுக அபிவிருத்தி திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. நீதித்துறையின் சுயாதீனத் தன்மை ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கின்றது. சட்டமும் உத்தரவுகளும் எவ்வித தாக்கமும் இன்றி நாட்டினுள் செயற்பட்டு வருகின்றன. நாட்டில் நீதியின் அதிகாரம் நிலையாக்கப்பட்டிருக்கின்றது. சட்டத்திற்கு முரணான கைதுகளுக்கான எந்த வாய்ப்பும் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது.

சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றி கவனம் செலுத்தும்போது 2014 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பாரதூரமான குற்றச் செயல்களை 30 சதவீதத்தால் குறைத்துக்கொள்ள முடிந்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபை 2017 ஆம் ஆண்டில் 13,200 மில்லியன் ரூபாய் தேறிய இலாபத்தை ஈட்டியிருக்கின்றது. 2016 ஆம் ஆண்டின் தேறிய இலாபமான 1,100 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடும்போது இது நூற்றுக்கு நூறு சதவீதமான வளர்ச்சியாகும். துறைமுக துறையில் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ரீதியிலான பல வெற்றிகளை எம்மால் ஈட்ட முடிந்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் நாம் பெற்ற 15.1 பில்லியன் அமெரிக்கன் டொலர் வருமானமே அண்மித்த காலத்தில் நாம் பெற்ற உயரிய ஏற்றுமதி வருமானமாகும்.

புதிய தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்காக பாடசாலைத் துறையிலும் அரச துறையிலும் அனேகமான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டுத் தொழில், நாடு கடந்த உழைப்பாளிகள் ஆகிய துறைகளுக்காகவும்; நாம் மிக முக்கியமான பல வசதிகளை செய்து கொடுத்திருக்கின்றோம்.

2015 ஆம் ஆண்டின் பின் கல்வித்துறை அபிவிருத்தியில் 'அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை" செயற்திட்டம் மாணவர் நலன்புரி திட்டமான 'சுரக்ஷா" மாணவக் காப்புறுதி, கல்வி மறுசீரமைப்பு, அனைத்து பிள்ளைகளுக்கும் முதலாம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரையிலான கட்டாய தொடர் கல்வியை  பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம், தேசிய கல்வி நிறுவனத்தினை மறுசீரமைத்தல், மும்மொழிக் கல்வியை ஊக்குவித்தல் ஆகியன கல்வித்துறையில் வளர்ச்சியை காட்டியிருக்கும் துறைகளாகும்.

'பிள்ளைகளை பாதுகாப்போம்" தேசிய வேலைத்திட்டம், முன்பள்ளி மற்றும் பகல் நேரத்தில் குழந்தைகள் பராமரிக்கும் நிலையங்களின் மனித வள மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அபிவிருத்தி செய்தல், நிறை குறைந்த பிள்ளைப் பேறு எண்ணிக்கையினைக் குறைத்தல் மற்றும் தாய்மாரின் போஷாக்கு தன்மையினை உயர்த்துதல், வறிய பிரதேசங்களில் போஷாக்கின்மையினை குறைக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் பிள்ளைகளுக்கு போசாக்கு மிக்க ஒருவேளை உணவை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தினையும் நாம் ஆரம்பித்துள்ளோம்.

பால்நிலை வன்முறையினை குறைப்பதற்கான தேசிய செயற்திட்டம் தற்போது மிக நேர்த்தியாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. கிராமிய பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்படும் செயற்திட்டங்களில் 25 சதவீதமான முதலீடு பெண்களுக்காகவே ஒதுக்கப்படுகின்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முறையான வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை எமது அரசு மிக வேகமாகம் அதேவேளை பாரிய வளர்ச்சியினையும் ஈட்டியிருக்கின்றது. அதன்மூலம் 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க முடிந்திருக்கின்றது. அதிக பொருளாதார நெருக்கடியை கொண்டுள்ள குடும்பங்களுக்காக எமது அரசின் வீட்டுத்திட்டம் மிகுந்த பலனை அளித்திருக்கின்றது.

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் பயணத்தில் 2030 ஆம் ஆண்டளவில் வறுமையற்ற அதேவேளை வயோதிப மற்றும் விசேட தேவை உடையரின் உரிமைகளைப் பாதுகாக்கும் நாட்டினை கட்டியெழுப்பும் பணியில் 2015 - 2017 ஆம் கால எல்லைக்கான சேவை வழங்கும் இலக்கு குழுக்களாக  9 வீதமாகவுள்ள ஊனமுற்றோர், 12.5 வீதமான 60 வயதுக்கும் கூடியோர், மொத்த சனத்தொகையில் 12 வீதமாகவுள்ள தனிப் பெற்றோரைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் மொத்த சனத்தொகையில் 25 வீதமாகவுள்ள சமுர்த்தி உதவிபெறுவோர்  ஆகியோர் கணிப்பிடப்பட்டுள்ளனர்.

மின்சக்தித் துறையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியில் சூரிய சக்தி செயற்திட்டம் மூலம் 150 மெகாவோட்ஸ் மின்சக்தியை புதிதாக தேசிய மின்சக்தி கட்டமைப்புக்குள் கொண்டுவர முடிந்துள்ளது.

எதிர்காலத்தில் மின்சாரத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக கலப்பு மின் உற்பத்தி திட்டமொன்றை நாம் முன்வைத்துள்ளோம். அதேபோல் இதுவரை எந்த அரசினாலும் கண்டுகொள்ளப்படாத சுமார் 275,000 குடும்பங்களின் குப்பி லாம்பு வெளிச்சத்தில் கல்விகற்றுவந்த யுகத்தை நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம். அவர்களின் இல்லங்களுக்கு அரசின் செலவில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அபிவிருத்திக்காக முக்கியத்துவம் வழங்குவது விசேட அம்சமாகும். ஏனைய நாடுகள் முகங்கொடுக்கும் கடும் காலநிலை மாற்றங்களுக்கு நாமும் முகங்கொடுத்துள்ளோம். கடந்த பல வருடங்களாக நிலவிய வரட்சியால் விவசாய உற்பத்தி வீழ்ச்சியை சந்தித்துள்ளதுடன் முன்னிருந்த அரசாங்கங்களைப் போலேவே எமக்கும் வெளிநாட்டிலிருந்து அரசியை இறக்குமதி செய்ய நேர்ந்தது. வருடாந்த மழை வீழ்ச்சி குறைந்து காணப்படுவதால் விவசாயத்துறையின் உற்பத்தி மற்றும் வருமானம் நூற்றுக்கு முப்பது வீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதுடன் நீர் மின் உற்பத்திக்கும் அது பாரியளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் இரசாயன உரங்களை தவிர்த்துவிட்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பல தேசிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன


தொடர்........


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top