முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
அநுருத்த பொல்கம்பொலவுக்கு விளக்கமறியல்


குற்ற விசாரணை பிரிவு (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுருத்த பொல்கம்பொலவுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ரயில் பாதை நிர்மாண பணிகளின்போது ரூபா 80 இலட்சம் மோசடி செய்தமை தொடர்பில், நேற்று (15) இரவு, CID யினால் பொல்கம்பொல கைது செய்யப்பட்டார்.
அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) கிளிநொச்சி நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்துமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த பீ. திஸாநாயக்க, இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அநுருத்த பொல்கம்பொல அப்பதவிக்கு நியமிக்கப்பட்டபோதும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்திற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை அப்பதவியிலிருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top