காஸா எல்லையில் பாலஸ்தீனியர்கள் கொன்று குவிப்பு
- .நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது

இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்படுவது தொடர்பாக விவாதிக்க எதிர் வரும் 13-ம் திகதி .நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது.
1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது.
குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் காஸா எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 129 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, கடந்த மே மாதத்தில் மட்டும் 61 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், காஸா எல்லையில் போராடும் பாலஸ்தீன மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையை அவசரமாக கூட்ட வேண்டும் என அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு கோரிக்கை விடுத்தது.
இதனையேற்று, ஐக்கிய நாடுகள் சபையின் 72-வது கூட்டம் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பு அவசர கூட்டம் வரும் புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top