வங்காளதேசத்தில் பிரபல எழுத்தாளர்
ஷாஜகான் பாச்சு சுட்டுக்கொலை

வங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சுவை மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 நபர்கள் சுட்டுக் கொலை செய்தனர்.
வங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு ( Shahzahan Bachchu, 60) (வயது 60). இவர் பிஷாகா புராக்காசோனி என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். மதசார்பற்ற கொள்கைகள் பற்றி துணிச்சலுடன் தனது கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
இவர் நேற்று முன்தினம் தனது பூர்வீக கிராமமான ககால்டியில் இருந்தார். அங்கு அவர் நோன்பு திறப்புக்கு முன்பாக ஒரு மருந்துக்கடைக்கு, தனது நண்பர்களை சந்திப்பதற்காக சென்று இருந்தார்.
அப்போது அங்கே 2 மோட்டார் சைக்கிள்களில் 5 நபர்கள் வந்தனர். அவர்கள் ஷாஜகான் பாச்சு இருந்து கொண்டிருந்த மருந்துக்கடையின் மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர்கள் மருந்துக்கடையில் இருந்த ஷாஜகான் பாச்சுவை தரதரவென்று வெளியே இழுத்து வந்தனர். அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிவிட்டு அங்கு இருந்து தப்பினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமானார்.
இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. மதசார்பற்ற கொள்கைக்கு அவர் ஆதரவாக பேசி வந்ததால் பல முறை அவருக்கு மத அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பயங்கரவாத தடுப்பு பொலிஸ் படையினர் அங்கு விரைந்து, ஷாஜகான் பாச்சு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட ஷாஜகான் பாச்சு, வங்காளதேச கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆவார்.
வங்காளதேசத்தில் மதசார்பின்மைக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள், எழுதுகிறவர்கள், வலைத்தள பதிவாளர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top