பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமைக்கு
எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு
டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு


புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சமகால அமைச்சரவை ஆகியவற்றுக்கு சட்டரீதியாக அனுமதியில்லை எனவும், அவர்களின் நியமனங்களை ரத்து செய்யுமாறும் கோரி ஐக்கிய தேசிய கட்சியினால் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் 122 உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

மனு மீதான வழக்கை மேல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபயசேகர ஆகியோரின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்‌ஸவுக்கு, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடையாதென, சபாநாயகரால் உறுதிசெய்யப்பட்டுள்ளதென, ஜனாதிபதி சட்டத்தரணி ஈ.கனகேஸ்வரனால், இன்று (30), மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மஹிந்தவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், தொடர்ந்தும் அவர் அந்தப் பிரதமர் பதவியில் நீடிப்பது உகந்ததல்லவென, சட்டத்தரணி எடுத்துக் கூறினார்.

மஹிந்த உள்ளிட்ட அமைச்சரவைக்கும் பிரதமர் பதவியை அவர் வகிப்பதற்கும், சட்ட ரீதியில் அதிகாரம் இல்லையெனத் தீர்ப்பளிக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் கைச்சாத்திட்டு தாக்கல் செய்யப்பட்ட யாதுரிமைப் பேராணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (30) ஆராய்ந்த போதே, சட்டத்தரணி கனகேஸ்வரன், மேற்கண்டவாறு கூறினார்.

இதனால், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம், மஹிந்த ராஜபக்ஷவால், பிரதமர் பதவி வகிப்பதற்கு சட்ட ரீதியான அதிகாரம் கிடையாதெனவும், சட்டத்தரணியால் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கைச்சாத்திடப்பட்ட நிலையிலேயே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top