அரசியலமைப்புக்கு அமையவே செயற்படுகிறேன்
கொமன்வெல்த் செயலாளரிடம் ஜனாதிபதி மைத்திரி


(File Photo)

அரசியலமைப்புக்கு அமையவே தான் செயற்படுவதாகவும், ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும், கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலாளர் பரோனஸ் பற்றீசியா ஸ்கொட்லன்ட்டிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக, கொமன்வெல்த் பொதுச்செயலாளருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் தொலைபேசி மூலமான உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை பின்பற்றுமாறும், எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாகவும், பெயர் அழைத்து அல்லது இலத்திரனியல் வாக்களிப்பு முறையில் வாக்கெடுப்பை நடத்துமாறும், சபாநாயகரிடம் தெளிவாக கூறியுள்ளதாகவும், கொமன்வெல்த் செயலாளரிடம் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்போது, கொமன்வெல்த் அமைப்பு இலங்கையுடன் ஒத்துழைத்துச் செயற்படும் என்றும், தற்போதைய அரசியல்  நெருக்கடிகளை இலங்கை சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்ளும் என்று நம்புவதாகவும், கொமன்வெல்த் செயலாளர் கூறினார் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்குமிடையில் தொலைபேசி உரையாடல்….

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பரோனஸ் பெற்றீஸியா ஸ்கொட்லான்ட் அவர்களுக்குமிடையில் இன்று (23) ஒரு விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.
இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஏற்பவே தான் செயற்படுவதாகவும் ஜனநாயக நடைமுறைகளை தொடர்ந்தும் பேணிவருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப செயற்படுமாறு தான் சபாநாயகரிடம் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இருப்பைத் தீர்மானிக்கின்ற மிக முக்கியமானதொரு விடயம் தொடர்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல்களுக்கு ஏற்ப அல்லாது இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அல்லது பெயர்களின் மூலம் உரிய நடைமுறைகளை பேணுமாறும் தான் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
பொதுநலவாய அமைப்பின் நீண்டகால உறுப்பினர் என்ற வகையிலும் ஆசியாவின் பழைமை வாய்ந்த ஜனநாயக நாடு என்ற வகையிலும் இலங்கை ஜனநாயகத்தை கடைப்பிடித்து வருவது தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாக செயலாளர் நாயகம் இதன்போது தெரிவித்தார்.
பொதுநலவாய அமைப்பு தொடர்ந்தும் இலங்கையுடன் நெருங்கிப் பணியாற்றும் என்று உறுதியளித்துள்ள அவர், தற்போதைய அரசியல் நெருக்கடியை இலங்கை இணக்கமான முறையில் தீர்த்துக்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top