ஐக்கிய தேசிய முன்னணியின்
தலைவர்களுடனான பேச்சில் இழுபறி
இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை
மீண்டும் நாளை சந்திக்கிறார் மைத்திரி



தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பது குறித்து, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன், நேற்றிரவு நீண்டநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்திய போதும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு, இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.

இந்தப் பேச்சுக்களில், ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவில்லை. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான, ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், திகாம்பரம், மனோ கணேசன், ராஜித சேனாரத்ன, அகில விராஜ் காரியவசம், சஜித் பிரேமதாச, ஜயம்பதி விக்ரமரத்ன, மலிக் சமரவிக்ரம, கயந்த கருணாதிலக, லக்ஸ்மன் கிரியெல்ல, கபீர் ஹாசிம் ஆகியோர் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சுக்களின் போது, நாடாளுமன்றத்தில் இன்னொரு பிரேரணையைக் கொண்டு வந்து பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஐதேமு தலைவர்களிடம் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனினும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விவகாரத்தில், இணக்கப்பாடு ஏதும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், மீண்டும் நாளை சந்தித்துப் பேச்சு நடத்துவது என்று இருதரப்பும் முடிவு செய்துள்ளன.

இந்தச் சந்திப்பில் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று றிசாத் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

எனினும், ஜனாதிபதியுடனான சந்திப்பு சாதகமானதாக இருந்தது என்று ஐதேக பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியைச் சந்தித்த பின்னர், ஐதேமு தலைவர்கள் அலரி மாளிகைக்குச் சென்று, ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, மைத்திரிபால சிறிசேனவுடனான பேச்சுக்களின் விபரங்களை எடுத்துக் கூறியுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top