மௌனத்தை உடைத்தார் துமிந்த திசநாயக்க
மைத்திரிக்கு எதிராக புதிய அணி



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள துமிந்த திசநாயக்க உள்ளிட்டவர்கள், தனி அணியாகச் செயற்படத் திட்டமிட்டுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்குப்  பின்னர், அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க, கடும் வெறுப்படைந்துள்ளார்.

அவர் ஐதேகவுக்குத் தாவப் போகிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில், பசில் ராஜபக்ஸ நேரடியாக அவரது வீட்டுக்குச் சென்று பேச்சுக்களை நடத்தினார். இதையடுத்து, அவர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

எனினும், துமிந்த திசநாயக்க இன்னமும் அவரது அமைச்சுக் கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை. கடந்த 14ஆம் திகதிக்குப் பின்னர் நடந்த நாடாளுமன்றத்தின் எந்த அமர்வுகளிலும் அவர் பங்கேற்கவுமில்லை.

அமைதியாக இருந்து வந்த துமிந்த திசநாயக்க நேற்று தனது மௌனத்தை உடைத்துள்ளார்.

தற்போதைய  முறையை  நான் விரும்பவில்லை. நாட்டின் அபிவிருத்திக்காக எந்தவொரு கட்சி எல்லைகளுக்குப் அப்பாற்பட்ட புதியதொரு சக்தியை கட்டியெழுப்ப நான் பணியாற்றுகிறேன் என்று அவர்  ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்தார்.

தமது அடுத்த நகர்வு எந்தவொரு கட்சி எல்லைகளையும் அடிப்படையாக கொண்டதாக இருக்காது என்றும், 2015  ஜனாதிபதித் தேர்தலில், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது போன்ற, தேசிய நலன்களை மனதில் வைத்துப் பணியாற்றப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு நாடு முன்னோக்கிச் செல்வதற்கும், பொருளாதாரத்துக்கு உதவுவதற்குமான ஒரு புதிய அமைப்பு முறையை  உருவாக்க எதிர்பார்க்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கவுடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக துமிந்த திசநாயக்க ஆலோசனை நடத்தியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

துமிந்த திசநாயக்க தனி அணியாகச் செயற்படவுள்ளார் என்றும், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும், சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் அண்மையில் பொதுஜன முன்னணியுடன் இணைந்து கொண்டமை குறித்தும்,  இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

அதேவேளை, நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது இதுபற்றிக் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக, கட்சியின் மத்திய குழு முடிவெடுக்கும். அது எனது முடிவு அல்லஎன்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, இன்று நடக்கவிருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் சந்திரிகா குமாரதுங்கவும்,  துமிந்த திசநாயக்கவும் பங்கேற்பார்களா என்பது கேள்வியாக உள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top