இன்றும் நாடாளுமன்றத்தைப்
புறக்கணித்தது மஹிந்த தரப்பு
விஜயதாச ராஜபக்ஸ மாத்திரம்  கலந்து கொண்டார்



நாடாளுமன்றம் இன்று முற்பகல்10.30  மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சபை அமர்வுகளைப் புறக்கணித்துள்ளனர்.

பிரதமராக நியமிக்கப்பட்ட ஹிந்த ராஜபக்ஸவின்,  பிரதமர் செயலகத்துக்கான நிதியைக் கட்டுப்படுத்தும், பிரேரணை மீது  இன்று விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முற்பகல் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும்,  அரசதரப்பு பங்கேற்கவில்லை.

பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை கட்டுப்படுத்துவது  சட்டபூர்வமானதல்ல என்பதால், இது குறித்து விவாதிக்கும் இன்றைய அமர்வை புறக்கணிப்பதாக  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

எனினும்,  ஆளும் கட்சி வரிசையில்  அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ மாத்திரம்  அமர்ந்துள்ளார்.

அதேவேளை,   அண்மையில் மஹிந்த ராஜபக்ஸ அரசுக்கு ஆதரவு தெரிவித்த,  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர்  இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளார்.

ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த  அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ உரையாற்றுகையில்,
அரசியல் நெருக்கடியால் மக்கள் அதிர்ச்சியில்இன்று உள்ளனர். ஜனநாயக கட்டமைப்புக்களின் பாதுகாப்பை பாராளுமன்றம் உறுதிப்படுத்துகிறது.
நாம் 30 வருட காலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோம். முப்படை வீரர்கள் மட்டுமன்றி இலங்கையர்கள் ஏராளம் உயிரிழந்தனர். அப்படி ஒரு நிலைமை மீண்டும் வரக் கூடாதென்றே ஒரு ஜனநாயக புரட்சி நடந்தது. அதனால் தான் தே பொது வேட்பாளராக மைத்திரியை தெரிவு செய்தது. நாடு நன்றாக வர வேண்டும் என்பதே மக்களின் அவாவாக இருந்தது. நாட்டின் நன்மை கருதி 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினோம் . நிறைவேற்று அதிகாரத்தின் பல அதிகாரங்கள் நீக்கப்பட்டன. அது முழுமையானதல்ல .

நாங்கள் நல்லாட்சியை தேசிய அரசாக அமைத்தோம்.பல பிரச்சினைகள் குற்றச்சாட்டுக்கள் வந்த போதும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.ஆனால் ஒரு கட்டத்தில் இருதரப்புக்களும் சராசரி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டன. அந்த இருதரப்பையும் கட்டுப்படுத்த இரு தலைவர்களாலும் முடியாமற் போனது..

அப்படி ஒரு நிலைமையில் தான் திடீரென ஒக்டொபர் 26 இல் அரசியல் அதிரடி தீர்மானங்கள் வந்தன. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அது இப்பொது நீதிமன்ற விசாரணையில் நிற்கின்றது.பின்னர் சபையில் குழப்பங்கள் ஏற்பட்டன. மக்கள் இன்று செய்வதறியாமல் நிற்கின்றனர். இதுவரை மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை..

அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உள்ளது. நிறைவேற்று அதிகாரத்தின் உத்தரவை அரசியலமைப்பு அதிகாரம் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதையும் அரசியலமைப்பு அதிகாரத்தின் ஆணையை நிறைவேற்று அதிகாரம் ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கும் நிலைமை இப்போது உள்ளது.

அரசியல் பேதங்களை மறந்து நாம் பாராளுமன்ற ஜனநாயக முறையை பின்பற்ற வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவர்களுக்கு ஆட்சியமைக்க அதிகாரம் வழங்க வேண்டும். நாட்டின் நன்மை கருதி அது நடக்க வேண்டும்.. ஒரு கொள்கை உடன்பாடு ஏற்படுத்தப்பட்டு இந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

பாராளுமன்ற வேலைகளை ஒரு பக்கம் வைத்து ஜனாதிபதியுடன் பேசி ஓரிரு நாட்களில் இந்த பிரச்சினைக்கு முடிவை சபாநாயகர் எடுக்க வேண்டும். ஜனாதிபதி இதில் விருப்புடன் இருப்பதை என்னால் அறிய முடிந்தது. இவ்வாறு விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.  .



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top